கோலாலம்பூர், ஏப்ரல் 3 – சபாவில் நேற்று இரவு சீன நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவரையும், பிலிப்பைன்ஸை சேர்ந்த விடுதி ஊழியர் ஒருவரையும் கும்பல் ஒன்று கடத்திச் சென்றது. இந்த சம்பவம் மலேசியா மற்றும் சீனாவிற்கு இடையிலான நல்லுறவைக் கெடுக்கும் நோக்கத்தோடு இருக்கலாம் என பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
எனினும், அரசாங்கம் கடத்தலுக்கு இது தான் காரணம் என்று இன்னும் முடிவு செய்யவில்லை என டிவிட்டரில் தெரிவித்துள்ளதாக பெர்னாமா குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, முன்னதாக மசீச தலைவர் லியோ தியோங் லாய் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், “MH370 விவகாரத்தில் மலேசியாவின் பெயருக்கு மேலும் களங்கம் விளைவிக்க இந்த கடத்தல் நடத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
இந்த செய்தியாளர் கூட்டத்தில் லியாவுடன் மலேசியாவுக்கான சீன தூதர் ஹுவாங் ஹுய்காங்கும் இருந்தார்.
“மலேசியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்” என ஹுவாங் கேட்டுக்கொண்டார்.
மாயமான MH370 விமானத்தை தேடும் விவகாரத்தில், மலேசிய அரசாங்கம் வெளிப்படையாக தகவல்களை வெளியிடுவதில்லை என அதில் பயணம் செய்த சீனப் பயணிகளின் உறவினர்கள் கூறிக் கொண்டிருக்கும் வேளையில், இந்த கடத்தல் சம்பவம் மேலும் நிலைமையை மோசமடையச் செய்யும் என்று கூறப்படுகின்றது.