இஸ்லாமாபாத், ஏப்ரல் 18 – பாகிஸ்தானில் வடக்கு வசிரிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் பகுதிகளில் தெஹ்ரிக் இ தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இந்த இயக்கத்தினருடன் அரசு பிரதிநிதிகள் அமைதி பேச்சு நடத்தி வருகின்றனர்.
இதனால் சண்டை நிறுத்தத்தை தலிபான்கள் அறிவித்துள்ளனர். அந்த சண்டை நிறுத்தம் கடந்த வாரம் முடிந்தது. அதன்பின் 10 நாட்களுக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என்று தலிபான்கள் கூறினர்.
இந்நிலையில், தலிபான் இயக்கத்தின்கீழ் உள்ள பல்வேறு தீவிரவாத குழுக்களின் அரசியல் பிரிவினர் வடக்கு வசிரிஸ்தானில் கடந்த 3 நாட்களாக ஆலோசனை நடத்தினர். கூட்டத்தின் முடிவில், சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க கூடாது என்று முடிவெடுத்துள்ளனர்.
எனினும், பாகிஸ்தானில் தலிபான்களுக்கு அங்கீகாரம், அடிப்படை உரிமைகள், தலிபான்களுக்கு எதிராக நிறுத்தப்பட்டு உள்ள கூட்டு ராணுவ படைகளை விலக்கி கொள்ளுதல், கைது செய்யப்பட்டுள்ள தலிபான் தீவிரவாதிகளை விடுவிப்பது போன்ற பல்வேறு பிரச்சனைகளில் முடிவெடுக்க முடியாமல் பாகிஸ்தான் அரசு தத்தளித்து வருகிறது.
‘எங்களது கோரிக்கைகளுக்கு பாகிஸ்தான் அரசு தெளிவான முடிவு எடுக்கவில்லை. அதனால் சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க மாட்டோம்’ என்று தலிபான்கள் கூறியுள்ளனர்.