சென்னை, ஏப்ரல் 29 – தமிழகத்தில் மறு ஓட்டுப்பதிவு கோரி, தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்கவில்லை. எனவே, எந்த தொகுதியிலும், மறு ஓட்டுப்பதிவு நடக்க வாய்ப்பில்லை என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.
தமிழகத்தில், நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும், 17-நாட்கள் உள்ள நிலையில், பிரவீன்குமார் கூறியதாவது,
தமிழகத்தில், 42 ஓட்டு எண்ணிக்கை மையங்களில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.கடந்த, 2009 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2011 சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் சில ஓட்டுச் சாவடிகளில், மறு ஓட்டுப் பதிவு நடந்தது.
இந்த தேர்தலிலும் மறு ஓட்டுப் பதிவு இருக்கலாம் என நினைத்தேன். நான்கு இடங்களில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. ஒரு இடத்தில், ஆள்மாறாட்டம் நடந்ததாக பிரச்சனை ஏற்பட்டது.
ஒரு ஓட்டுச் சாவடியில், அதிகளவில் ஓட்டுகள் பதிவாகின. மறு ஓட்டுப் பதிவு நடத்த, தேர்தல் பார்வையாளர்கள் யாரும், தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்கவில்லை. எனவே, தமிழகத்தில் மறு ஓட்டுப் பதிவு இல்லை என்றார் பிரவீன்குமார்.