பெட்டாலிங் ஜெயா, மே 1 – ஜசெகவைச் சேர்ந்த தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சியா லியோங் பெங் இன்று காலை 7.30 மணியளவில், மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனையில் காலமானார் என ஜசெகவின் துணைப் பொதுச் செயலாளர் டத்தோ ஙே கூ ஹாம் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் சியா புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார் என ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினர் தோமஸ் சு கூறினார்.
இன்று பிற்பகலில் 48 வயதான சியாவின் நல்லுடல் தெலுக் இந்தானிலுள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு வரப்படும்.
கடந்த 1999 முதல் மூன்று தவணைகள் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளடங்கிய பாசீர் பெடாமார் சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக சியா சேவையாற்றியுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற 13வது பொதுத் தேர்தலில் ஜசெகவின் சார்பில் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சியா, தேசிய முன்னணியின் டத்தோ மா சியூ கியோங்கை 7,313 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மனோகரனின் அனுதாபங்கள்
இதற்கிடையில், தெலுக் இந்தான் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினரான ஜசெகவைச் சேர்ந்த எம்.மனோகரன் சியாவின் மரணம் குறித்து அதிர்ச்சி தெரிவித்தார்.
“கடந்த திங்கட்கிழமைதான் அவரை மருத்துவமனையின் சந்தித்தேன். எங்கள் தலைவர் கர்ப்பால் சிங்கின் பிரிவிலிருந்து நாங்கள் இன்னும் மீளாமல் துயரத்தில் இருக்கும் சமயத்தில் சியா மரணமடைந்தது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று மனோகரன் கூறினார்.