கோலதிரெங்கானு, மே 13 – திரெங்கானு சட்டமன்ற சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், திரெங்கானு மாநில சட்ட மன்ற சபாநாயகரை அரண்மனைக்குள் நுழையாமல் பாஸ் கட்சி ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர் என்று கூறப்படுவதில் கொஞ்சமும் உண்மை இல்லை என்றும் அது வெறும் வதந்திதான் என்றும் பாஸ் விளக்கமளித்துள்ளது.
பாஸ் ஆதரவாளர்கள் ஒரு போதும் கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என்று அக்கட்சியின் மாநில முன்னாள் ஆணையர் அப்துல் வாஹிட் எண்டுட் கூறியுள்ளார்.
“இது எங்கள் வழி அல்ல! நடக்கின்ற பிரச்சினை தேசிய முன்னணி தலைவர்களுக்குள்தான். எங்களுக்கு அதற்கும் சம்பந்தம் அல்ல!” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி குறித்து விவாதிக்க மாநில பாஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடனான சிறப்பு சந்திப்பு நிச்சயமாக நடைபெறும் என அவர் குறிப்பிட்டார்.
அம்னோவைச் சேர்ந்த திரெங்கானு சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி விலகலால், அரசியல் குழப்படிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில் திரெங்கானுவின் தங்களின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை என்ன என்பது குறித்து விவாதிக்க திரெங்கானு பாஸ் தலைவர்கள் சந்திப்புகள் நடத்தி வருகின்றனர்.