பெட்டாலிங் ஜெயா, மே 15 – இணையத்தில் தான் என்று கூறி பரப்பப்படும் பிக்கினி உடை அணிந்த பெண்ணின் புகைப்படம் தனது இல்லை என ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் அரசியல் உதவியாளரான டியானா சோஃப்யா முகமட் டவுட் அறிவித்துள்ளார்.
தெலுக் இந்தான் இடைத்தேர்தலில் வேட்பாளராக டியானா நிறுத்தப்படலாம் என்று ஆரூடங்கள் கூறப்பட்டதையடுத்து இந்த கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் சில நபர்களால் பரப்பப்பட்டன.
பின்னர், அந்த புகைப்படம் பிலிப்பைன்ஸ் நடிகை பௌலீன் லுனாவினுடையது என்று டியானாவின் ஆதரவாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
எனினும், டியானா தான் வேட்பாளராக நிறுத்தப்படுவது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
“நான் வேட்பாளராக நிறுத்தப்படக்கூடும் என்று ஆரூடங்கள் கூறப்பட்டதையடுத்து இது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் பரப்பி ஏனது பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். அதனால் நான் மிகவும் மனமுடைந்து போயிருக்கின்றேன். எனினும் நல்லவர்கள் தான் எப்போதும் வஞ்சிக்கப்படுவார்கள் என்பதை அறிவேன். நான் அரசியலில் இருப்பது மக்களுக்கு சேவை செய்வதற்காக தான்” என்று டியானா கூறியுள்ளார்.
இணையத்தில் உலா வரும் இந்த புகைப்படங்களை தொடர்ந்து தனக்கு சில மர்ம அழைப்புகளும், குறுந்தகவல்களும் வருவதாகவும் டியானா தெரிவித்துள்ளார்.
கடந்த மே 1 ஆம் தேதி தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சியா லியாங் பெங் (வயது 48) புற்று நோய் காரணமாக காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் வரும் மே 31 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
அதற்கான வேட்புமனுத்தாக்கல் வரும் மே 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.