கோலாலம்பூர் – 2014-ஆம் ஆண்டு தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடந்த சமயம் நாடெங்கும் மக்களை அதிகமாக கவனம் ஈர்த்த பெயர் டயானா சோபியா முகமட் டாவுட்.
தனது பாரம்பரியத் தொகுதியான தெலுக் இந்தானில் கெராக்கான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ மா சியூ கியோங் போட்டியிட, அவரை எதிர்த்து ஜசெக களமிறக்கிய வேட்பாளர்தான் டயானா. 27 வயதே ஆன மலாய்க்கார இளம் பெண்.
ஆச்சரியத்தில் ஆழ்ந்தது மலேசிய அரசியல் களம். சீனர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு தொகுதியின் இடைத் தேர்தலில் கெராக்கான் போன்ற பழம் பெருமை வாய்ந்த கட்சித் தலைவரை – ஒரு சீனரைத் தோற்கடிக்க – ஜசெக மலாய் இளம் பெண் ஒருவரை களமிறக்கியது அவ்வளவாக இரசிக்கப்படவில்லை.
இறுதி முடிவு? ஓரிரு வாரங்களில் தனது கவர்ச்சியால் நாடு முழுக்கப் புகழ் பெற்றுவிட்டாலும் டயானா 238 வாக்குகளில் தெலுக் இந்தான் இடைத் தேர்தலில் மா சியூ கியோங்கிடம் தோல்வி அடைந்தார்.
தற்போது ஜசெக தேசிய பிரச்சாரப் பிரிவின் துணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். டயானா ஜசெக இளைஞர் பிரிவில் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பணியாற்றுகிறார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் மற்றொரு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜசெகவின் மற்றொரு பிரபலமும், பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கின் முன்னாள் செயலாளரும், நடப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான சைரில் கிர் ஜொஹாரியை (Zairil Khir Johari) டயானா திருமணம் புரிகிறார் என்பதுதான் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் இடம் பெற்று வரும் தலைப்புச் செய்தி.
சைரில் கூட குறிப்பிடத்தக்க அரசியல் பின்னணி கொண்டவர்தான். அவரது தந்தை டான்ஸ்ரீ முகமட் கிர் ஜொஹாரி ஒரு காலத்தில் அம்னோவின் தூண்களில் ஒருவராகவும், அமைச்சராகவும் இருந்தவர். சைரில்லின் தாயார் சீனப் பெண்மணியாவார். இதன் காரணமாக, சீன மொழியில் திறன் வாய்ந்த சைரில் தந்தையாரின் வழியில் அம்னோவில் இணையாமல் ஜசெகவில் இணைந்தார்.
தற்போது பினாங்கு புக்கிட் பெண்டரா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும் 2013 முதல் இருந்து வருகிறார். பினாங்கு மாநில ஜசெகவின் உதவித் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
சைரில்-டயானாவின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று சனிக்கிழமை ஈப்போவில் நடந்தேறியது. அந்நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் உலா வருகின்றன. சைரில் தனது முகப் பக்கத்திலும் (பேஸ்புக்) தனது திருமணம் குறித்து பதிவிட்டிருக்கிறார்.
ஏற்கனவே, திருமணமாகி மனைவியைப் பிரிந்த சைரில்லுக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு. டயானாவுக்கு இது முதல் திருமணம்.
“ஒரு கதவு சாத்ததினால் இன்னொரு கதவு திறக்கும் என்பது எனது வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. டயானா எனது வாழ்க்கையில் பக்கத் துணையான, இணையான பெண் என்பதை உணர்கிறேன். ஒரு புதிய தொடக்கத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன்” என தனது முகநூல் பதிவில் சைரில் குறிப்பிட்டிருக்கிறார்.