இஞ்சி வாந்தியை தடுக்க கூடியது. இன்றைக்கும் பேருந்து நிலையங்களில் “இஞ்சி முரபா” என்று இஞ்சியை பொடித்து சர்க்கரைப் பாகில் இட்டு விற்கப்படுவதைப் பார்க்கிறோம். சிலருக்கு பேருந்து பயணத்தின் போதோ, மலைப்பகுதியின் மீது ஏறும்போதோ இறங்கும் போதோ குமட்டலோடு வாந்தி ஏற்படுவது இயற்கை ஆகும்.
இஞ்சியை உபயோகப்படுத்துவதால் இருமல், சளி, குமட்டல், வாந்தி, உடல் சூடு, வாய்வு, வயிற்று வலி, வாத, பித்தம், சிலேத்தும நோய்கள், செரிமானம் இன்மையால் ஏற்படுகின்ற வயிற்றுப் போக்கு ஆகிய துன்பங்களைப் போக்குவதோடு நன்கு பசியையும் தூண்டிவிடும்.
இஞ்சியைச் சாறெடுத்து தேனுடனோ அல்லது நீரிலிட்டு கொதிக்க வைத்து இனிப்பு சேர்த்து தேநீராகவோ எடுத்துக் கொள்வது எளிது. இஞ்சியை கற்ப மருந்தாகச் சொல்லியுள்ளனர். `கற்பம்` என்றால் நீண்ட ஆயுளைத் தரக்கூடியது என்று பொருளாகும்.
மகோதரம் என்று சொல்லக் கூடிய பெருவயிற்று நோயில் இஞ்சிச் சாற்றை பத்து மி.லி.என்று தொடங்கி சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே சென்று அன்றாடம் 25 மி.லி.வரை நோய் நீங்கும் வரை கொடுக்க பெருவயிறு, கனத்த வயிறு குணமாகும்.
இஞ்சி கொழுப்புச்சத்தை குறைக்க கூடியது. இதனால் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இதயநோய், மாரடைப்பு போன்றவை வராமல் தடுக்க இயலும். இஞ்சியில் அடங்கியுள்ள “இஞ்சரால்”, ஷோகுவால் என்னும் வேதிப் பொருள்கள் வயிற்றில் ஏற்படும் அமிலச் சுரப்பை குறைக்கக் கூடியது. மூட்டு வலிகளுக்கும் இது மகத்தான பயன்தருவது.