ஜூலை 13 – கடந்த 2010இல் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளின்போது ஒரு கணவாய் மிகச் சரியாக காற்பந்து விளையாட்டுப் போட்டிகளில் யார் வெல்வார் என தனது சைகைகளின் மூலம் கணித்துக் கூறி உலகப் புகழ் பெற்றதை காற்பந்து இரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.
தற்போது அதே போன்று மேலே படத்தில் இருக்கும் ‘லிட்டல் போல்'(Little Paul) என்ற பெயர் கொண்ட கணவாய் (Octopus) ஜெர்மனிதான் வெல்லும் என தனது சைகைச் செயல்பாடுகளின் மூலம் கணித்துக் கூறியுள்ளது.
இரண்டு நாட்டின் சின்னங்களையும் அருகருகே வைத்தபோது, ஜெர்மனியின் கடல் வாழ் உயிரினப் பூங்காவில் உள்ள இந்த கணவாய் ஜெர்மனியின் கொடி சின்னத்தையே தேர்ந்தெடுத்துள்ளது.
இதனால், ஜெர்மனிதான் இறுதிப் போட்டியில் வெல்லும் என பலர் நம்புகின்றனர்.
தாய்லாந்து யானையும் ஜெர்மனி என்கின்றது
இதற்கிடையில் தாய்லாந்து நாட்டின் சியாங் மாய் நகரில் உள்ள யானை ஒன்றும் ஜெர்மனியை தனது செயல்பாட்டின் மூலம் தேர்ந்தெடுத்துள்ளது.
தாய்லாந்து நாட்டுக்காரர்கள் யானையைத் தெய்வமாகப் போற்றுபவர்கள். அங்கு பல இடங்களில் இந்துக் கடவுளான விநாயர்தான் தெய்வமாக வணங்கப்படுபவர். தெருக்களில், இந்தியா போல, யானை ஜாலியாக நடந்து செல்லும் காட்சிகள் அங்கு சர்வ சாதாரணம்.
தாய்லாந்திலும் ஒரு யானையை வைத்து ஜாதகம் பார்த்திருக்கின்றார்கள். ஜெர்மனி – அர்ஜெண்டினா என இரண்டு நாடுகளுக்கும் கோல் கம்பங்களை உருவாக்கி யானையை வைத்து கோல் அடித்தபோது யானை ஜெர்மனியைக் குறி பார்த்து பந்தை அடித்திருக்கின்றது.
அந்தப் படத்தைத்தான் மேலே பார்க்கிறீர்கள்.
அதை வைத்து ஜெர்மனிதான் வெல்லும் என்பது தாய்லாந்து ஜாதகக்காரர்களின் கணிப்பு.
கோலாலம்பூர் கிளிகள் மட்டும் சளைத்ததா?
இது போல் மிருகங்களை வைத்து ஜாதகம் பார்ப்பதில் நம்மவர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன? சாதாரணமாகவே தெருவுக்குத் தெரு கிளி வைத்து ஜோசியம் பார்ப்பவர்களாயிற்றே நாம்!
நமது நாட்டில் பெட்டாலிங் ஜெயா, சன்வே லாகூன் வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் கிங்கோங் மற்றும் யோக்கோ என்ற இரண்டு கிளிகளை வைத்து அதிர்ஷ்ட சீட்டு எடுத்துப் பார்த்ததில் அவை அர்ஜெண்டினாதான் வெல்லும் என சீட்டு எடுத்துக் கொடுத்துள்ளன என மலேசிய நண்பன் நேற்றைய (ஜூலை 12) நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நாளை அதிகாலை பார்ப்போம்!
தாய்லாந்து யானையும், ஜெர்மனியின் கணவாயும் சொல்வது பலிக்கப் போகிறதா?
அல்லது நமது நாட்டு கிளிகள் சொல்லும் ஜோசியம் பலிக்கப் போகிறதா என்று!