பிரேசில், ஜூலை 13 – அகில உலகமும் காய்ச்சல் பீடித்த நிலையில் கடந்த சில நாட்களாக பிதற்றிக் கொண்டிருக்கும் வார்த்தைகள் அர்ஜெண்டினாவா? ஜெர்மனியா? என்பதுதான்!
சிறப்பாக வேலை செய்யும் இயந்திரத்தை ஆங்கிலத்தில் ‘ஜெர்மன் இயந்திரம்’ (German Machinery) என்பார்கள்.
அதுபோல, கட்டுக்கோப்பான குழுவாக இயங்கி, கோல் அடிப்பது ஒன்றையே தாரக மந்திரமாகவும், எதிரணி கோல் எதுவும் அடித்துவிடாமல் தடுப்பதையே குறிக்கோளாகவும் கொண்ட இயந்திரத் தனமான குழுவாக இயங்கி இன்று இறுதி ஆட்டம் வரை வந்திருக்கின்றது ஜெர்மனி.
ஆனால், அர்ஜெண்டினாவின் நிலைமை வேறு. அங்கு லியோனல் மெஸ்ஸி இருக்கின்றார்.
எவ்வளவுதான் வலுவான தற்காப்பு ஆட்டக்காரர்கள் மலைபோல் முன் நின்றாலும், சிறிய உருவம் கொண்ட மெஸ்ஸி, கண்மூடிக் கண் திறப்பதற்குள் உள்ளே இலாவகமாக நுழைந்து கோல் அடித்து விடும் திறன் வாய்ந்தவர்.
ஜெர்மனி குழுவினர் பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்…
ஜெர்மனி குழுவிலும் தோமஸ் முல்லர், குளோஸ் போன்ற அதிகமான கோல் அடித்த மன்னர்கள் இருக்கின்றார்கள் என்றாலும், அவர்களுக்கு மெஸ்ஸியின் இலாவகமோ, உலகின் சிறந்த ஆட்டக்காரர் என்ற பட்டமோ கிடையாது.
மேலும், கட்டுக் கோப்பாக இயங்கும் ஜெர்மனி குழுவின் பலத்தில்தான் முல்லர், குளோஸ் போன்றவர்களால் கோல் அடிக்க முடிகின்றது.
ஆனால், மெஸ்ஸியோ, தனிமனித பீரங்கி! குழு எப்படியிருந்தாலும், சாமர்த்தியமாக விரைவாக முன்னேறி கோல் அடிக்கும் திறன் வாய்ந்தவர்.
இந்த இரண்டு குழுக்களின் முழுத் திறனும் இன்று வெளிப்படுத்தப்படும் என்பதால் காற்பந்து இரசிகர்களுக்கு இன்றைய ஆட்டம் மறக்க முடியாத விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
கடந்த கால ஆட்டங்கள்
ஜெர்மன் பயிற்சியாளர் ஜோசிம் லுயி…
பிரேசிலும், ஜெர்மனியும் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இறுதி ஆட்டத்தில் மோதப் போவது இது மூன்றாவது முறை.
1986ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்தில்தான் முதன் முதலாக அப்போது மேற்கு ஜெர்மனியாக இருந்த ஜெர்மனியும், அர்ஜெண்டினாவும் சந்தித்தன. அதில் 3-2 கோல் எண்ணிக்கையில் அர்ஜெண்டினா வெற்றி வாகை சூடியது.
அடுத்து, 1990ஆம் ஆண்டில் இத்தாலியின் தலைநகர் ரோமில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மேற்கு ஜெர்மனி 1-0 கோல் எண்ணிக்கையில் அர்ஜெண்டினாவை வெற்றி கொண்டது.
இப்போது நடைபெறுவது மூன்றாவது இறுதி ஆட்ட சந்திப்பு – பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில்!
வேறு நிலைகளிலான உலகக் கிண்ணப் போட்டிகளிலும் ஜெர்மனியும் அர்ஜெண்டினாவும் ஏற்கனவே மோதியுள்ளன.
2006ஆம் ஆண்டில் பெர்லினில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் கால் இறுதிப் போட்டியில் ஜெர்மனியும் அர்ஜெண்டினாவும் மோதியபோது, அந்த ஆட்டத்தில் ஜெர்மனி 4-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கடந்த 2010ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியிலும் கால் இறுதிப் போட்டியில் ஜெர்மனியும் அர்ஜெண்டினாவும் மீண்டும் நேருக்கு நேர் மோத வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகின.
இந்த ஆட்டத்திலும் ஜெர்மனி 4-0 கோல் கணக்கில் அர்ஜெண்டினாவைத் தோற்கடித்தது.
இப்படியாக காற்பந்து உலகில் பரம வைரிகளாகத் திகழும் இந்த இரண்டு நாடுகளில்,
தனது கடந்த காலத் தோல்விகளுக்கு பழிக்கு பழி வாங்க வேண்டிய அருமையான வாய்ப்பு இப்போது அர்ஜெண்டினாவுக்கு வாய்த்துள்ளது.
மெஸ்ஸிக்கு தனது திறனைக் காட்ட அருமையான வாய்ப்பு
பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் அர்ஜெண்டினா விளையாட்டாளர்கள்….
அதோடு, தனது காற்பந்தாட்ட விளையாட்டு வரலாற்றில் உச்சத்திற்கு வந்துள்ள லியோனல் மெஸ்ஸிக்கு,
இன்றைய ஆட்டத்தில் ஜெர்மனியை வெற்றி கொள்வதன் மூலம் தனது நாட்டிற்கும், தனது விளையாட்டுத் திறமைக்கும் அழியாத பெருமையை பதிவு செய்வதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.
இதுவரை ஸ்பெயினின் பார்சிலோனா கிளப் குழுவுக்காக 425 ஆட்டங்களில் விளையாடி 354 கோல்கள் அடித்து,
பல முறை உலகின் சிறந்த ஆட்டக்காரர் பட்டத்தை வென்றிருந்தாலும், மெஸ்ஸிக்கு தனது கரங்களால் உலகக் கிண்ணத்தை உயரே தூக்கிப் பிடிக்கும் வாய்ப்பு இதுவரை நேரவில்லை.
உலகக் காற்பந்து விளையாட்டாளர்கள் அனைவருக்கும் இருக்கும் உச்சகட்ட கனவு – தான் விளையாடும் குழு உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும், அந்தக் கிண்ணத்தை ஏந்தும் கரங்களில் ஒன்றாக தனது கரமும் இருக்க வேண்டும் என்பதுதான்.
மெஸ்ஸி உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்பது இது மூன்றாவது முறை.
கடந்த இரண்டு முறையும் மெஸ்ஸியின் உலகக் கிண்ணக் கனவுகளைத் தகர்த்தெறிந்ததும் இதே ஜெர்மனிதான் என்பது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம்.
2006ஆம் ஆண்டில் மெஸ்ஸி முதன் முறையாக உலகக் கிண்ணப் போட்டியில் அர்ஜெண்டினாவுக்காக களமிறங்கியபோது, கால் இறுதிப் போட்டியில் முன்பு குறிப்பிட்டதுபோல், ஜெர்மனியிடம் 4-2 எண்ணிக்கையில் – பினால்டி கோல்களில் தோல்வியடைந்து வெளியேற நேர்ந்தது.
2010ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக உலகக் கிண்ணப் போட்டியில் அர்ஜெண்டினாவின் குழுவில் மெஸ்ஸி பங்கேற்றபோதும் – அவரது உலகக் கிண்ணக் கனவுகளை மீண்டும் சிதைத்ததும் இதே ஜெர்மனிதான்.
அந்தப் போட்டியில் மீண்டும் கால் இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் மோசமாக தோல்வியடைந்து தனது அர்ஜெண்டினா குழுவோடு வெளியேறிய மெஸ்ஸிக்கு,
எல்லாவற்றுக்கும் ஒட்டு மொத்தமாக பழிவாங்கும் வாய்ப்பு இன்றைக்கு அவரது ‘காலடிகளில்’ வந்து சேர்ந்திருக்கின்றது.
ஜெர்மனியைக் கடந்த கால தோல்விகளுக்காக பழிவாங்குவதற்கும் – உலகக் கிண்ணத்தைத் தனது கரங்களில் ஏந்துவதற்கும் – இதைவிட இன்னொரு வாய்ப்பு மெஸ்ஸிக்கு கிடைக்கப் போவதில்லை.
காரணம், அடுத்த உலகக் கிண்ணப் போட்டிகள் 2018ஆம் ஆண்டில் நடைபெறும் போது வயது காரணமாக மீண்டும் அர்ஜெண்டினா குழுவில் மெஸ்ஸி இடம் பெற முடியாமல் போகலாம்.
ஆக, மெஸ்ஸிக்கு உலகக் கிண்ணத்தை ஏந்துவதற்கான வாய்ப்பு இதுதான் – இன்றுதான் – இதைவிட்டால் இன்னொரு வாய்ப்பு அமையாது என்பதால் –
தனது முழுத் திறமையையும் – சக்தியையும் இன்றைய ஆட்டத்தில் மெஸ்ஸி வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.
-இரா.முத்தரசன்