கோலாலம்பூர், ஜூலை 18 – கிழக்கு உக்ரைனில் ஏவுகணை தாக்குதல் நடத்தி வீழ்த்தப்பட்ட எம்எச்17 மலேசிய விமானத்தில் இருந்து எந்த ஒரு அபாய அழைப்புகளும் வரவில்லை என்பதை பிரதமர் நஜிப் உறுதிப்படுத்தினார்.
அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பால் நிர்ணயம் செய்யப்பட்ட பாதுகாப்பான பாதையில் தான் விமானம் பயணித்துள்ளது என்றும் நஜிப் குறிப்பிட்டார்.
உக்ரைன் கிளர்ச்சியாளர்களால் விமானம் வீழ்த்தப்பட்டிருந்தால், இதற்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்றும் இன்று அதிகாலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நஜிப் தெரிவித்தார்.
இதனிடையே, மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் எம்எச்17 -ல் பயணம் செய்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், 154 டச்சு பயணிகள், 43 மலேசியர்கள், 27 ஆஸ்திரேலியர்கள், 12 இந்தோனேசியர்கள், 9 பிரிட்டன் , 4 ஜெர்மன், 4 பெல்ஜியன், 3 பிலிப்பைன்ஸ் மற்றும் 1 கனடா நாட்டு குடிமக்கள் பயணம் செய்துள்ளனர்.
மேலும் 41 பேர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். மொத்தம் 298 பயணிகள் என்று கூறப்படுகின்றது.