காசா, ஜூலை 22 – பாலஸ்தீனத்தின் காசா நகர் மீதான இஸ்ரேல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது. காசாவில் நிலைமை மோசமாகி வருவதையடுத்து, ஐநா பாதுகாப்பு ஆணையம் அவசர ஆலோசனை நடத்தியது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 2 இஸ்ரேல் வாலிபர்கள் பலியானார்கள்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் ராணுவத்தினர் கடந்த 13 நாட்களாக வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த 13 நாட்களில் காசா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் குழந்தைகள், பெண்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் அப்பாவி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பலியாகி வருவது சர்வதேச நாடுகளை கவலையடைய செய்துள்ளது.
இதனால் அங்கு போர் நிறுத்த பேச்சுவார்த்தையை தொடங்குமாறு மலேசியா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
காசா விவகாரம் தொடர்பாக, ஐநா பாதுகாப்பு ஆணையத்தில் அவசர கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. மேலும் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த ஐநா பொது செயலாளர் பான் கீ மூன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விரைந்துள்ளார்.
இதற்கிடையில், இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரை உயிருடன் பிடித்திருப்பதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். எகிப்து விடுத்த போர் நிறுத்த அழைப்பை ஹமாஸ் அமைப்பினர் நிராகரித்த நிலையில், பிரச்சனைக்கு தீர்வு காண பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளின் உதவிகளை நாடியுள்ளார்.
போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் இஸ்ரேலுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், “காஸா மீதான தாக்குதலுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு இஸ்ரேலுக்கு உள்ளது.
எனவே தாக்குதலை நிறுத்தப் போவதில்லை‘ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காசாவில் போர் நிறுத்தம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஜான் கெர்ரி இன்று காலை எகிப்து விரைந்துள்ளார்.
அங்கு அவர் தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் மூலமாக போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொள்வார் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால், ஏராளமான மக்கள் வெளியேறி வருகின்றனர். காசாவில் தவித்த 4 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.