கொழும்பு, ஆகஸ்ட 2 – இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து இடம்பெற்ற சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியானது தொடர்பாக இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது.
ஈழத் தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய அரசியல் கடிதங்களை காதல் கடிதங்களாக சித்தரித்து இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் கட்டுரை ஒன்று வெளியானது.
இந்த கட்டுரைக்கு இந்திய அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால், உடனடியாக இணையதளத்தில் இருந்து அந்த கட்டுரை மற்றும் புகைப்படம் நீக்கப்பட்டது. இந்நிலையில், அவதூறு பரப்பும் வகையில் வெளியான அந்த கட்டுரைக்கு இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது.
இதுதொடர்பாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “சர்ச்சைக்குரிய கட்டுரை மற்றும் படம் அதிகாரிகளின் அனுமதியின்றி கவனக் குறைவாக வெளியிடப்பட்டுள்ளது.
அந்த கட்டுரை இலங்கை அரசின் இந்தியா மீது கொண்டுள்ள கண்ணோட்டத்தை பிரதிபலிக்கவில்லை. குறிப்பிட்ட அந்த கட்டுரை வெளியானதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பினைக் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.