கோலாலம்பூர், செப்டம்பர் 9 – அடுத்தடுத்து அரசியல்வாதிகளை நோக்கி பாய்ந்துள்ள தேச நிந்தனைச் சட்டம் அண்மையில் மலாயாப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஒருவரையும் நோக்கிப் பாய்ந்துள்ளதைத் தொடர்ந்து, அந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி மாபெரும் கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மலாயாப் பல்கலைக்கழக மாணவர் மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பேராசிரியர் டாக்டர் அஸ்மி ஷரோம்மிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்திலும் இந்த ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெறும் என மலாயாப் பல்கலைக்கழக மாணவர் மன்றம் கூறியது.
இந்த மன்றத்தின் தலைவர் பஹ்மி ஸைனோல் கூறுகையில், இந்த ஆர்ப்பாட்டம் மலாயாப் பல்கலைக்கழக ஊழியர் சங்கக் கூட்டத்தின் போது நடைபெற உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இந்த ஆர்ப்பாட்டம் மாணவர்களின் உரிமை, இதில் கலந்துகொள்ள அனைவரையும் அழைக்கின்றோம் என இதன் ஒருங்கிணைப்பாளர் வின்ஸ் டான் குறிப்பிட்டார். “இது புதுமுக மாணவ, மாணவியர் அறிமுகவாரம். எனவே, பெரும்பாலான வகுப்புகள் இன்னும் துவங்கவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார்.
“அதோடு நாங்கள் 1 மணியிலிருந்து 4.30 மணிவரை வகுப்புகள் ஏதும் நடைபெறாது என பிரகடனப்படுத்தியுள்ளோம். மாணவர்கள் அனைவரும் இதில் கலந்து கண்டனப் பேருரைகளைக் கேட்க வசதியாக இருக்கும்” என்றார் அவர்.
பேராசிரியர் அஸ்மி செப்டம்பர் 2-ம் தேதி தேச நிந்தனை சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டார். பேராக் அரசியல் நெருக்கடி சம்பந்தமாக அவர் எழுதிய கட்டுரை ஆகஸ்ட் 14-ம் தேதி பிரசுரிக்கப்பட்டது தொடர்பில் அவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
மலாயாப் பல்கலைக்கழக கல்வித்துறை ஊழியர்கள் சங்கத் தலைவரான அஸ்மி தேச நிந்தனைக் குற்றம் சாட்டப்படும் முதலாவது கல்வியாளராவார். 45 வயதான இவர் மீது சுமத்தப்பட்டுள்ள தேச நிந்தனைச் சட்ட விதிகளின் கீழ் இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 3 வருட சிறை அல்லது 5000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இதற்கிடையே விரிவுரையாளர் டாக்டர் லீ ஹ்வோக் ஆன், கல்வியை ஊட்டும் பொறுப்பில் உள்ள ஒருவர் மீது அரசாங்கம் தேச நிந்தனைக் குற்றச்சாட்டை கொண்டு வந்தது அதிர்ச்சி தருகிறது என்று கருத்து தெரிவித்துள்ளார்.