வாஷிங்டன், செப்டம்பர் 22 – எகிப்தில் தீவிரவாதத்தை தடுக்க அந்நாட்டு அரசுக்கு உதவுவதற்காக 10 அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர்களை வழங்க அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.
எகிப்தில் சிறுபான்மையினராக இருக்கும் கிறிஸ்துவர்களை குறிவைத்து தீவிரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும், அரசு படைகள் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்நிலையில், தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் தற்போதைய எகிப்து அரசுக்கு உதவ அமெரிக்கா முன்வந்தது. இதைத் தொடர்ந்து, தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க அதிநவீன ‘அபாச்சி ரக’ ஹெலிகாப்டர்கள் வழங்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா அறிவித்திருந்தது.
இதுதொடர்பான பேச்சுவார்த்தை நேற்று வாஷிங்டனில் நடைபெற்றது. அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் சுக் ஹேகலுடன் எகிப்து பாதுகாப்பு அமைச்சர் கலோனல் ஜெனரல் செட்கி சோபி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் முடிவில், எகிப்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அரசு உதவுவதற்காக 10 அபாச்சி ஹெலிகாப்டர்களை வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்து பெரும் பங்கு வகித்தது. இதைக் கருத்தில் கொண்டு, எகிப்துக்கு உடனடியாக ஹெலிகாப்டர்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கி உள்ளது.