மும்பை, அக்டோபர் 4 – காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் சுத்தமான இந்தியா (கிளீன் இந்தியா) திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
திரைப்பட நடிகர்கள் சல்மான்கான், கமல்ஹாசன், நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இத்திட்டத்தில் இணைந்து செயலாற்ற வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பினை ஏற்றுக்கொள்வதாக சச்சின், பிரியங்கா சோப்ரா மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொள்வதாக நடிகர் சல்மான்கானும் தற்போது தெரிவித்துள்ளார்.
“பிரதமர் மோடியின் அழைப்பை நானும் எனது அறக்கட்டளையும் ஏற்றுக்கொள்கிறோம். சுத்தமான இந்தியா திட்டத்திற்காக எங்களது 100 சதவிகித ஒத்துழைப்பை அளிப்போம்” என்று சல்மான் கான் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருக்கிறார்.