நியூயார்க், அக்டோபர் 13 – எபோலா என்னும் கொடிய நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்தை தாண்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதி நாடுகளில் ஒருவகை உயிர்க்கொல்லி நோய் பரவி வருகிறது.
எய்ட்ஸைவிட கொடிய நோயாக கருதப்படும் எபோலோ பரவமால் தடுக்க உலக சுகாதார நிறுவனம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ‘எபோலா’ நோயை கட்டுப்படுத்த, உலகளாவிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 8 ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம் எபோலா நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டது. அதில் 7 நாடுகளை சேர்ந்த 8,399 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 4,033 பேர் இதுவரை இந்நோய்க்கு பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை உலக சுகதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் போது, 8033 பேர் நோயால் பாதிக்கப்பட்டதாகவும் அதில், 3,865 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.