Home நாடு “கூட்டணி சகாக்கள் போராட்டங்களில் இருந்து விலகி நிற்கக் கூறினர்”- மனம் திறந்த அன்வார்

“கூட்டணி சகாக்கள் போராட்டங்களில் இருந்து விலகி நிற்கக் கூறினர்”- மனம் திறந்த அன்வார்

551
0
SHARE
Ad

Anwar Ibrahimகோலாலம்பூர், அக்டோபர் 19 –  தனது போராட்டங்களில் இருந்து விலகி நிற்குமாறு தனது கூட்டணி கட்சி நண்பர்கள் அறிவுறுத்தியதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

தனது நன்மை கருதியே நண்பர்கள் இவ்வாறு கூறியதாகவும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தகாத உறவு தொடர்பான வழக்கின் இறுதிக்கட்டத்தை இம்மாத இறுதியில் எதிர்கொள்ள இருக்கும் நிலையில், இங்கிலாந்தில் வெளியாகும் ‘தி டெலிகிராஃப்’ பத்திரிகைக்குப் பேட்டியளித்துள்ளார் அன்வார்.

#TamilSchoolmychoice

“கணிசமான நண்பர்கள் என்னை இவ்வாறு விலகி நிற்கக் கூறினர். ஆனால் இது மிகவும் கடினமான ஒன்று. குறிப்பாக எனது குடும்பத்திற்கு கடினமான ஒன்று. மலேசியாவில் சீர்திருத்தத்தையும், மறுமலர்ச்சியையும் இலக்காகக் கொண்டு எனது போராட்டத்தை தொடங்கிய போதே இது சுலபமானது அல்ல என்பது எனக்குத் தெரியும். மலேசியர்கள் ஒட்டு மொத்தத்தில் ஊழல் நிறைந்த ஓர் அமைப்பையும் அடக்குமுறையையும் எதிர்கொண்டுள்ளனர். என்னைப் போன்றவர்கள் இத்தகைய அராஜகங்களை எதிர்த்து நிற்கவில்லை என்றால் இளைஞர்களிடம் இருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும்?” என கேள்வி எழுப்பி உள்ளார் அன்வார்.

தேச நிந்தனை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள அன்வார், இது மத ரீதியில் மேற்கொள்ளப்படும் ஓரவஞ்சனையான நடவடிக்கை என்று கூறியுள்ளார்.

துனிசியா அல்லது துருக்கியைப் போல் ஜனநாயக தன்மையுடன் விளங்க விரும்பும் இஸ்லாமிய நாடுகள் மலேசியாவை ஓர் எச்சரிக்கை சின்னமாகக் கருத வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.