மும்பாய், அக்டோபர் 19 – பரபரப்பாக நடைபெற்று முடிந்திருக்கும் இந்தியாவின் இரண்டு முக்கிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவிருக்கின்றன.
மகராஷ்டிரா, ஹரியானா இரு மாநிலங்களிலும் இந்தியாவின் நடப்பு ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி (பாஜக) தனித்து பெரும்பான்மை பெற்று வெல்லும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், மகராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமையக் கூடும் என்றும் சிவசேனா மற்றும் மகராஷ்டிரா நவநிர்மான் சேனா ஆகிய கட்சிகள் கணிசமான தொகுதிகளை வெல்லக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது.
கடந்த அக்டோபர் 15ஆம் தேதி இந்த இரு மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்றது.
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பாஜகவின் வலிமையையும், மக்கள் ஆதரவையும் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் வாய்ப்பாக இந்த தேர்தல்கள் அமைகின்றன.
குறிப்பாக இந்தியாவின் வர்த்தக நகரான மும்பாயை உள்ளடக்கிய மகராஷ்டிரா மாநிலத்தைக் கைப்பற்றுவது பாஜகவின் முக்கிய நோக்கமாகும்.
சிவசேனா, நவநிர்மான் கட்சிகள்
நீண்ட காலமாக அரசியல் கூட்டணிகளாகத் திகழ்ந்து வந்து பாஜகவும் சிவசேனாவும் தொகுதி உடன்பாடுகளில் தோல்வி அடைந்ததால் இந்த முறை தனித்துப் போட்டியிடுகின்றன.
மறைந்த பிரபல அரசியல்வாதி பால் தாக்கரே கட்சிதான் சிவசேனா. அந்தக் கட்சியை தற்போது அவரது மகன் உத்தவ் தாக்கரே தலைமையேற்று நடத்தி வருகின்றார்.
பால் தாக்கரேயின் மற்றொரு உறவினரான ராஜ் தாக்கரே, சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்று தொடக்கிய கட்சிதான் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி.
288 சட்டமன்றத் தொகுதிகளை மகராஷ்டிரா கொண்டிருக்கின்றது. ஹரியானா 90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கின்றது.
இன்று காலை இந்திய நேரப்படி 8.00 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்குகின்றது.
நண்பகலுக்குள் வெற்றியை நோக்கி எந்தக் கட்சிகள் நகர்கின்றன போன்ற விவரங்கள் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.