Home நாடு பைபிள் விவகாரம்: கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்த அஸ்மின் அலி

பைபிள் விவகாரம்: கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்த அஸ்மின் அலி

649
0
SHARE
Ad

azmin-ali2கோலாலம்பூர், நவம்பர் 16 – மலேசிய பைபிள் சங்கத்திடம் அண்மையில் பைபிள்கள் ஒப்படைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் தாம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுவது குறித்து கருத்து தெரிவிக்க அஸ்மின் அலி (படம்) மறுத்துவிட்டார்.

பைபிள்களை ஒப்படைப்பதில் உங்கள் பங்களிப்பு ஏதும் இல்லையா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இது தொடர்பாக நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இந்த விவகாரம் சுமுகமாக முடிந்துவிட்டது,” என்றார் அவர்.

சிலாங்கூர் இஸ்லாமிய துறை சார்பாக பறிமுதல் செய்யப்பட்ட 321 பைபிள்கள் கடந்த வெள்ளிக்கிழமை மலேசிய பைபிள் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மூலம் கடந்த ஓராண்டு காலமாக நிலவி வந்த சர்ச்சைக்குரிய விவகாரம் முடிவுக்கு வந்தது.

#TamilSchoolmychoice

இந்த பைபிள்களை திரும்ப ஒப்படைப்பது தொடர்பில் சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் பைபிள் விவகாரம் தொடர்பாக சிலாங்கூர் அரண்மனைக்கும் மதக் குழுக்களுக்கும் இடையே தான் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன என்றும் இதில் மந்திரி பெசார் சம்பந்தப்படவில்லை என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பைபிள் விவகாரம் குறித்த கேள்விக்கு நேரடியாக பதில் அளிப்பதை தவிர்த்துள்ளார் அஸ்மின் அலி.

சிலாங்கூர் சுல்தான் நேரடியாக இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாலும், மாநில இஸ்லாமிய விவகாரங்களுக்குத் தலைமை ஏற்பது சிலாங்கூர் சுல்தான்தான் என்பதாலும், கொஞ்சம் அடக்கி வாசிப்பதோடு, அதிகமாக இந்த விவகாரம் குறித்து பேசுவதையும் அஸ்மின் தவிர்த்துள்ளார் எனக் கருதப்படுகின்றது.

பைபிள் ஒப்படைப்பு விவகாரத்தை சமய சகிப்புத் தன்மையோடும், பொறுப்புணர்வோடும் கையாண்ட சிலாங்கூர் சுல்தானுக்கு தனது பாராட்டுகளை அஸ்மின் அலி தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.