கோலாலம்பூர், டிசம்பர் 4 – காவல்துறையின் புதிய துணைத் தலைவராக (டெபுடி ஐஜிபி) ஆக டத்தோஸ்ரீ நூர் ரஷிட் இப்ராகிம் நியமிக்கப்பட்டுள்ளார். 56 வயதான நூர் ரஷிட் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் தகவலை காவல் துறை தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபுபக்கார் நேற்று புதன்கிழமை வெளியிட்டார்.
இதற்கு முன்பு புக்கிட் அமான், போதைப் பொருள் கடத்தல் விசாரணைப் பிரிவுக்கு நூர் ரஷிட் தலைமை ஏற்றிருந்தார்.
நடப்பு டிசம்பர் மாதம் முதல் காவல்துறையின் இரண்டாவது உயரிய பதவியை அவர் வகிக்க உள்ளார். “நூர் ரஷிட் பரவலான அனுபவம் உள்ளவர். காவல்துறை விவகாரங்களை எதிர்கொள்ளக் கூடிய தலைமைத்துவ ஆற்றலும் பண்பும் உடையவர். மலேசிய காவல்படையின் வளர்ச்சிக்கு உரிய பங்களிப்பை அளிக்கக்கூடிய ஆற்றல் அவரிடம் உள்ளது என உறுதியாக நம்புகிறேன்,” என்று தான் வெளியிட்ட செய்திக் குறிப்பில் காலிட் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.
கெடா மாநிலத்தைச் சேர்ந்த நூர் ரஷிட், மலாயா பல்கலைக்கழகத்தில், அறிவியல் துறையில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர். காவல்துறையில் துணைக் கண்காணிப்பாளராக கால் பதித்தவர்.
“அவர் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். சபா காவல்துறை ஆணையர் மற்றும் புக்கிட் அமான் சிஐடி பிரிவின் துணைத்தலைவர் ஆகியன அவர் வகித்த பதவிகளில் சிலவாகும். காவல்துறை துணை ஐஜிபி பதவிக்கு அவர் மிகப் பொருத்தமானவர்,” என்று காலிட் அபுபக்கர் மேலும் கூறியுள்ளார்.