ஷா ஆலம், டிசம்பர் 4 – பிகேஆர் கட்சித் தலைவி டத்தோஸ்ரீ வான் அசிசாவின் பிறந்த நாளை பக்காத்தான் கூட்டணியைச் சேர்ந்த சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதற்காக அவர் எதிர்பாராத வகையில் பிறந்த நாள் கேக் ஒன்றை வரவழைத்து அவரைப் பரவசப்படுத்தினர்.
நேற்றுடன் 62ஆவது வயதை எட்டிப் பிடித்துள்ளார் வான் அசிஸா. புதன்கிழமை சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு மத்தியில், அவரது பிறந்தநாளைக் கொண்டாட பக்காத்தான் உறுப்பினர்கள் தீர்மானித்தனர். இதற்காக கேக் ஒன்று வரவழைக்கப்பட்டது.
சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி மற்றும் பக்காத்தான் கூட்டணி உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். அனைவரும் பிறந்த நாள் வாழ்த்து பாட, முகம் நிறைந்த புன்னகையுடன் பிறந்த நாள் கேக்கை வெட்டினார் வான் அசிசா.
மலேசிய வரலாற்றில் தடம் பதித்த பெண் அரசியல்வாதி
மலேசிய வரலாற்றில் ஒரு முக்கியமான அரசியல்வாதி வான் அசிசா. ஒரு மருத்துவராக, அவர் என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்பது மற்றவர்களுக்கு தெரியாமலே அவர் வாழ்ந்த காலம் ஒன்று உண்டு.
துணைப் பிரதமராக இருந்த தனது கணவருக்கு நேர்ந்த அநீதியைக் கண்டு கொதித்தெழுந்த வான் அசிசா, கணவரின் அரசியல் இடத்தைத் தக்க வைக்கவும், அவரது ஆதரவாளர்களுக்கு தலைமை ஏற்கவும் முன்வந்தார்.
காலப் போக்கில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மலேசிய நாடாளுமன்றத்தின் முதல் பெண் எதிர்க் கட்சித் தலைவராகவும், எதிர்க்கட்சிக் கூட்டணித் தலைவராகவும் உயர்ந்தார்.
நாட்டின் முதல் பெண் மந்திரி பெசாராக ‘காஜாங் திட்டத்தின்’ மூலம் வந்திருக்க வேண்டியவர், சில அரசியல் சூழ்நிலைகளால் அந்த வாய்ப்பை இழந்தார்.
ஒரு புறம் குடும்பம், இன்னொரு புறம் கணவருக்கான அரசியல் பயணம், கணவருக்கு இன்னல் ஏற்படும் தருணங்களில் அவருக்கு உறுதுணை, என பல முனைகளிலும் மலேசியப் பெண்களுக்கே முன்னுதாரணமாகத் திகழும் வான் அசிசாவுக்கு நாமும் பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம்.