Home நாடு மியான்மர் நாட்டவர்கள் கொல்லப்பட்ட ‘கொலைக்கூடம்’ கண்டுபிடிப்பு: மேலும் இருவர் கைது

மியான்மர் நாட்டவர்கள் கொல்லப்பட்ட ‘கொலைக்கூடம்’ கண்டுபிடிப்பு: மேலும் இருவர் கைது

740
0
SHARE
Ad

PDRMபுக்கிட் மெர்தாஜம், டிசம்பர் 7 – பினாங்கில் மியான்மர் நாட்டவர்கள் பலரை கொலை செய்ய கொலைக்கூடமாகவும் வதைக் கூடமாகவும் பயன்படுத்தப்பட்ட வீட்டை, காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

பார்ப்பதற்கு சாதாரண, மலிவு விலை வீடு போன்று காட்சி அளிக்கும் இந்த வீட்டின் பின்னணியில் பெரும் திகில் கதை மறைந்துள்ளது. இந்த வீட்டில்தான் மியான்மரைச் சேர்ந்த பலர் பழிக்குப் பழி வாங்கும் விதமாக கொல்லப்பட்டு, அவர்களது உடல் பாகங்களும் தனித்தனியாக வெட்டி எடுக்கப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.

கம்போங் பிசாங்கில் அமைந்துள்ள இந்த வீட்டிற்கு காவல் துறையினர் தற்போது பூட்டி (‘சீல்’) வைத்துள்ளனர். கொலைக்குப் பின்னர் ரத்தக்கறைகளை அகற்ற கொலையாளிகள் வீட்டை சுத்தப்படுத்தியும் புதிதாக வர்ணம் பூசியும் உள்ளனர். ஆனால் இதையும் மீறி ஆங்காங்கே ரத்தக்கறைகள் தென்படுகின்றன.

#TamilSchoolmychoice

கொலைகளை அரங்கேற்றிய பின்னர் கொலையாளிகள் வீட்டுச் சாவியை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இந்தக் கொலைக் கூடத்திலிருந்து ஆறு வீடுகள் தள்ளி உள்ள மற்றொரு வீட்டையும் வாடகைக்கு எடுத்து அங்கே தங்கியிருந்தபடி இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியுள்ளனர் கொலையாளிகள்.

வெட்டுக் கத்திகள் கண்டெடுக்கப்பட்டன

கொலைக்கூடமாக பயன்படுத்தப்பட்ட வீட்டிலிருந்து மூன்று நீளமான வெட்டுக்கத்திகளை பறிமுதல் செய்துள்ள காவல் துறையினர், அந்த வீட்டை கொலையாளிகள் கடந்த நான்கு மாதங்களாக வாடகைக்கு எடுத்திருந்ததாக தெரிவிக்கின்றனர்.

“இந்த வீட்டில் எத்தனை பேர் கொல்லப்பட்டு, பின்னர் பல பாகங்களாக வெட்டப்பட்டனர் என்று விசாரித்து வருகிறோம். பினாங்குத் தீவில் மேலும் இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளோம். இதன் மூலம் இந்த தொடர் கொலைகளுக்காக கைதானவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது,” என்கிறார் பினாங்கு காவல்துறையின் மூத்த துணை ஆணையர் டத்தோ வீரா அப்துல் ரகிம்.

கடந்த இரு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட மியான்மர் ஆடவர்கள் 15 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படுகொலைகள் தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக பினாங்கு காவல்துறை தெரிவித்துள்ளது.

“பினாங்கில் 18 மியான்மர் நாட்டவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக எங்களது விசாரணை நடைபெறும். கொலை செய்யப்பட்டவர்களின் உடல் பாகங்கள் வெவ்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளோம்,” என்றார் அப்துல் ரகிம்.