காசா, டிசம்பர் 21 – இஸ்ரேல், கடந்த ஆகஸ்ட் மாதம் காசாவுடன் ஏற்படுத்திய போர் ஒப்பந்தத்தினை மீறி மீண்டும் விமானத் தாக்குதலைத் தொடங்கி உள்ளது.
காசாவில் 50 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வந்த போர், உலக நாடுகளின் கோரிக்கைகளுக்கு இணங்க கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவிற்கு வந்தது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி வந்த நிலையில், 4 மாதங்களுக்குப் பிறகு இஸ்ரேலிய விமானம், காசாவின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏவுகணை (இராக்கெட்) தாக்குதலை நடத்தி உள்ளது.
எனினும், இஸ்ரேல் போர் ஒப்பந்தத்தை தீவிரமாக கடை பிடித்து வந்ததாகவும், தெற்கு இஸ்ரேல் மீது காசா பகுதியில் இருந்து இராக்கெட் தாக்குதல் நடத்தியவுடன், பதிலடி கொடுக்கவே இஸ்ரேல் தனது படைகளைக் கொண்டு தாக்கியதாகவும் அந்நாட்டு வட்டாரங்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பீட்டர் லேனர் கூறுகையில், “இஸ்ரேல் இராணுவம் எதிர் தாக்குதலைத் தான் நடத்தியது. எனினும் எங்கள் குறி காசா மக்கள் அல்ல, ஹமாஸ் பயங்கரவாதிகள் தான். அவர்களை நோக்கியே எங்கள் தாக்குதல் இருந்தது” என்று அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என காசாவின் சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், இஸ்ரேல் மீதான இராக்கெட் தாக்குதலுக்கு ஹமாஸ் இயக்கம் பொறுப்பேற்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.