Home அவசியம் படிக்க வேண்டியவை எம்எச்370 விமானத்தை அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்தியது: புதிய தகவலால் பரபரப்பு

எம்எச்370 விமானத்தை அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்தியது: புதிய தகவலால் பரபரப்பு

492
0
SHARE
Ad

MH370

கோலாலம்பூர், டிசம்பர் 22 – மாயமான எம்எச் 370 விமானத்தை இணையம் வழி யாரோ ஒருவர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும், இதையறிந்த அமெரிக்க விமானப் படை நடுவானில் விமானத்தை இடைமறித்துச் சுட்டு வீழ்த்தியுள்ளது என்றும் என புது ஆரூடம் கிளம்பியுள்ளது.

இம்முறை இந்தப் பரபரப்பை கிளப்பி இருப்பவர் முன்பு பிரான்சில் இயங்கி வந்த புரோடியஸ் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவரான மார்க் டுகெய்ன்.

#TamilSchoolmychoice

அமெரிக்க ராணுவம் தவறுதலாக இவ்வாறு செய்துவிட்டதாகவும் சொல்கிறார் இவர்.

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள டியாகோ கார்சியா என்ற தீவுக்கு அருகே உள்ள மாலத்தீவுக்கு தாம் சென்றிருப்பதாகவும், இக்குறிப்பிட்ட தீவை அமெரிக்கா தனது புலனாய்வு மற்றும் விமானப்படைத் தளமாகப் பயன்படுத்தி வருகிறது என்றும் கூறியுள்ளார் டுகெய்ன்.

எம்எச் 370 விமானம் டியாகோ கார்சியா தீவை நோக்கி பறந்து வந்ததைக் கண்டதாக இப்பகுதி மக்கள் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்ததை இத்தீவின் அதிகாரிகள் புறக்கணித்துவிட்டனர் என்று பிரான்சில் வெளியாகும் வாரப் பத்திரிகை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் டுகெய்ன்.

“பெரிய விமானம் ஒன்று குறைவான உயரத்தில் பறந்ததை நான் கண்டேன். வெள்ளை நிற பின்னணியில் சிவப்பு மற்றும் நீல நிற பட்டைகளை அந்த விமானத்தில் பார்க்க முடிந்தது (மாஸ் விமானத்தில் இருப்பது போல்),” என்று கூடஹுவடு என்ற சிறிய தீவில் வசிக்கும் மீனவர் தம்மிடம் தெரிவித்ததாக டுகெய்ன் கூறியுள்ளார்.

விமானம் மாயமான இரு வாரங்களுக்குப் பிறகு மாலத்தீவு கடலோரம் கண்டெடுக்கப்பட்ட சில பாகங்கள் எம்.எச்.370-வினுடையதாக இருக்க வேண்டும் என விமானத்துறை வல்லுநர்கள் தம்மிடம் உறுதி செய்திருப்பதாக தனது கூற்றுக்கு டுகெய்ன் மேலும் வலு சேர்க்கிறார்.

“இணையம் வழி யாரோ ஒருவர் எம்எச்370 விமானத்தை கடத்தி, தனது கட்டுப்பாட்டுக் கொண்டு வந்து இயக்கியுள்ளார். பிறகு உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்தபடியே விமானத்தை இந்தியப் பெருங்கடல் மீது பறக்கச் செய்துள்ளார். அப்போது டியாகோ கார்சியாவின் மீது செப்டம்பர் 9/11 பாணியில் தாக்குதல் நடைபெறக்கூடும் என்று அஞ்சிய அமெரிக்க விமானப் படை, எம்எச்370 விமானத்தை நடுவானில் சுட்டு வீழ்த்தியுள்ளது.

“இது தொடர்பான விசாரணையில் ஈடுபட்டபோது பிரிட்டனைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரி ஒருவர் இதில் தலையிட வேண்டாம் என என்னை எச்சரித்தார்,” என்றும் தனது 7 பக்க கட்டுரையில் டுகெய்ன் மேலும் குறிப்பிட்டிருப்பது இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.