கவுகாத்தி, டிசம்பர் 26 – போடோ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் மற்றும் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளதை அடுத்து அசாம் மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த சில தினங்களாக இங்கு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை மாநில காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது.
இதனால் ஆவேசமடைந்த தீவிரவாதிகள் சோனித்பூர், கோக்ரஜார், சிராங் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 கிராமங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இக்கிராமங்களில் ஆதிவாசியினரே அதிகம் வசித்து வருகின்றனர்.
தீவிரவாதிகளின் மிருகத்தனமான தாக்குதல் காரணமாக சோனித்பூர் மாவட்டத்தில் மட்டும் 39 பேர் பலியாகி உள்ளனர். கோக்ரஜார் மாவட்டத்தில் 25 பேரும், சிராங் மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் காரணமாக ஆவேசமடைந்த ஆதிவாசி மக்களும் தங்கள் பங்குக்கு வன்முறையில் ஈடுபட்டு வருவதால் அசாமில் பதற்றம் அதிகரித்துள்ளது. சோனித்பூரில் உள்ள புலோகுரின் என்ற பகுதியில் போடோ இனத்தவர்களுக்கு சொந்தமான 20 வீடுகளுக்கு ஆதிவாசிகள் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், ஆதிவாசிகளுக்கு ஆதரவாக வில் மற்றும் அம்பு ஏந்தி ஆயிரக்கணக்கான தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் தெகியாஜுலி காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றபோது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து அசாமில் கடந்த சில நாட்களாக நிகழ்ந்த தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
படங்கள்: EPA