டோக்கியோ, டிசம்பர் 26 – ஜப்பான் பிரதமராக ஷின்ஸோ அபே மீண்டும் தேர்வாகி உள்ளார். கடந்த புதன் கிழமை இதற்கான ஒப்புதல் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தனது பதவிக் காலம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகள் இருந்த நிலையில், தேர்தலை முன்பே நடத்தி, ஷின்ஸோ அபே பெரும் வெற்றியடைந்துள்ளார். அண்மைக் காலமாக அந்த நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவி வருகின்றது. இதற்கு அபேயின் எதிர்கால நோக்கமில்லாத பொருளாதார வரையறைகளே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதன் காரணமாக அவர் தனது செல்வாக்கினை தொடர்ச்சியாக இழந்து வந்தார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர் மதிப்பு குறைந்து விடும் என்ற நிலையில், மீண்டும் தேர்தலை நடத்தி இழந்த தனது செல்வாக்கினை அவர் மீட்டுள்ளார். செல்வாக்கு சரிந்து வந்த நிலையிலும் அபேயின் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம், எதிர்க் கட்சிகளின் பலவீனமாகும். இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி வெற்றிபெற அவர் முன்கூட்டியே தேர்தலை அறிவித்ததாகக் கூறப்படுகின்றது.
ஜப்பானில் அதிக செல்வாக்குடன் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அபே, பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் தவிக்கும் ஜப்பானை மீண்டும் வெற்றிப் பாதைக்கு பயணிக்கச் செய்வார் என்று அந்நாட்டு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.