நியூயார்க், ஜனவரி 22 – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கெதிராக போர் நடத்துவது ஒன்றே தீர்வு. அதனை நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாரக் ஒபாமா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூறியதாவது:– “இந்த புதிய நூற்றாண்டில் நாம் 15–வது ஆண்டில் இருக்கின்றோம். இந்த 15 ஆண்டுகளில் தீவிரவாதம் தொடர்ந்து நம்மை அச்சுறுத்தி வருகின்றது”.
“அதற்கு எதிராக புதிய தலைமுறைகள் இரண்டு நீண்ட பெரிய போர்களை சந்தித்துள்ளன. ஈராக் மற்றும் ஆப்கனில் 1 லட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க படைகள் பணியாற்றின”.
“6 ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கிலும், தற்போது ஆப்கனிலும் இராணுவத்தின் பணி முடிவடைந்துள்ளன. தற்போது அங்கு 15 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர்.”
“நட்பு அடிப்படையில் அமெரிக்கா, ஆப்கனில் அமைதி நிலவ போரிட்டது. இந்நிலையில், உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாகி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கெதிராக போர் தொடுக்க அமெரிக்க முடிவு செய்துள்ளது.”
“தீவிரவாதத்தை ஓழிக்க போர் ஒன்றே இறுதி முடிவாகும். அதற்காக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.