தோக்கியோ, ஜனவரி 23 – ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள தங்கள் நாட்டுப் பிணைக் கைதிகள் இருவரை விடுவிக்க, எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக ஜப்பான் செய்தி நிறுவனம் நேற்று வியாழக்கிழமை கூறியது.
இணையத்தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட காணொளியில், அடுத்த 72 மணி நேரத்துக்குள் ஜப்பான் அரசு 20 மில்லியன் டாலர்களை பிணைத் தொகையாக வழங்காவிட்டால்,
தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள கென்ஜி கோடோ (47), ஹருனா யுகாவா (42) ஆகிய இருவரும் கொல்லப்படுவார்கள் என ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்தனர்.
பயங்கரவாதிகள் விதித்த கெடு நெருங்கி வரும் நிலையில், அவர்களுடன் தொடர்பு கொண்டு பிணைக் கைதிகளை மீட்கும் நடவடிக்கைகளில் ஜப்பான் அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் அரசு செய்தித் தொடர்பாளர் யோஷிஹிடே சுகா கூறியதாவது; “கென்ஜி கோடோவையும், ஹருனா யுகாவையும் பிடித்து வைத்துள்ள பயங்கரவாதிகளுடன் பேச்சு நடத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்.
“எனினும் இதுவரை அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அந்த காணொளிக்குபின் ஐ.எஸ். அமைப்பினரும் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை” என்றார் அவர்.
இதற்கிடையே, ஐ.எஸ். அமைப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்த கியோட்டோ பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும், இஸ்லாமியச் சட்ட நிபுணருமான கோ நகாடா,
ஆப்கானிஸ்தானில் பிணைக் கைதியாக இருந்து பின்னர் விடுவிக்கப்பட்ட செய்தியாளர் கோசுகே சுனியோகா ஆகியோர் பேச்சு வார்த்தைக்கு முன்வந்துள்ளனர்.