கோலாலம்பூர், ஜனவரி 25 – நேற்று மாலை மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம், மஇகாவின் நிலைமை குறித்து விவாதிக்க கூட்டிய கூட்டத்தில் ஏறத்தாழ 80க்கும் மேற்பட்ட தொகுதித் தலைவர்களும், பிரதிநிதிகளும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதும், கட்சித் தலைவர் பழனிவேலுவுக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் எனக் கருதப்பட்ட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு சுப்ராவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதும் மஇகா வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவித்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள மஇகா நெருக்கடியில், தேசியத் தலைவரின் எதிர்ப்பையும் மீறி, இந்தக் கூட்டத்தில் இத்தனை முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டது ஓர் அரசியல் திருப்புமுனையாகக் கருதப்படுகின்றது.
காரணம், துணைத் தலைவருக்கு கூட்டம் கூட்டவோ, சங்கப் பதிவக விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கவோ நான் அதிகாரம் வழங்கவில்லை என பழனிவேல் பகிரங்க பத்திரிக்கை அறிவிப்பு விடுத்த பின்னரும் –
பழனிவேலுவின் நெருக்கமான ஆதரவாளர்கள் ஒவ்வொரு தொகுதித் தலைவராக அழைத்து, “அந்தக் கூட்டத்திற்குப் போகாதீர்கள்” என நெருக்குதல் அளித்தும் –
இத்தனை தலைவர்கள் துணிச்சலுடன் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பது, பழனிவேலுவுக்கு எதிராக பெருகி வரும் எதிர்ப்புகள், அவர் கட்டம் கட்டமாக இழந்து வரும் ஆதரவு ஆகியவற்றை தெளிவாக எடுத்துக் காட்டுவதாக இருக்கின்றது.
அந்த வகையில் சுப்ராவுக்கு நேற்றைய கூட்டம் ஒரு வெற்றிப் படியாக கருதப்படுகின்றது.
பழனிவேலுவுக்கு நெருக்கமான தலைவர்கள் சுப்ரா பக்கம்!
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பழனிவேலுவுக்கு நெருக்கமானவர்களாக கருதப்படும் பகாங் மாநிலத் தலைவர் செனட்டர் டத்தோ குணசேகரன், செர்டாங் தொகுதித் தலைவர் என்.இரவிச்சந்திரமன் (காஜாங் ரவி), உலு லங்காட் தொகுதித் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன், சிலாங்கூர் மாநிலச் செயலாளர் கே.ஆர்.பார்த்திபன், கிளானா ஜெயா தொகுதி தலைவர் டத்தோ முத்து, பூச்சோங் தொகுதித் தலைவரும் முன்னாள் தலைமைச் செயலாளருமான சக்திவேல், போன்றவர்கள் கலந்து கொண்டிருப்பது மஇகா வட்டாரங்களில் பலரது புருவங்களை உயர்த்தியிருக்கின்றது.
இந்தக் கூட்டத்தின் வழி தொகுதித் தலைவர்கள் டாக்டர் சுப்ராவுக்கு பகிரங்கமாகத் தெரிவித்திருக்கும் ஆதரவைத் தொடர்ந்து, மேலும் பல தொகுதித் தலைவர்கள் சுப்ரா அணியின் பக்கம் தாவக் கூடும் என்றும் மஇகா விவகாரங்களைக் கண்காணித்துவரும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
பழனிவேலு பதவிகள் வழங்கிய பலர் சுப்ரா பக்கம் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பழனிவேலுவால் தேசிய மின்சார வாரிய (டிஎன்பி) இயக்குநராக நியமிக்கப்பட்ட சக்திவேல், செனட்டராக நியமனம் பெற்ற பகாங் மாநிலத் தலைவர் டத்தோ குணசேகரன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டது முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகின்றது.
இவர்களைத் தவிர நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட செர்டாங் தொகுதித் தலைவர் காஜாங் ரவியும் பழனிவேலுவின் நீண்ட கால ஆதரவாளர் ஆவார். 2013இல் நடைபெற்ற கட்சித் தேர்தலில் பழனிவேலு அணியின் சார்பில் போட்டியிட்ட காஜாங் ரவி, அந்த முயற்சியில் தோல்வி கண்டார். ரவி சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாளரும் ஆவார்.
பிளவுபடும் சிலாங்கூர் மாநிலம்
நேற்று நடைபெற்ற சுப்ரா ஆதரவுக் கூட்டத்தில் தெளிவாகியுள்ள மற்றொரு அரசியல் உண்மை, பழனிவேலு தலைவராக இருக்கும் சிலாங்கூர் மாநிலத்தில் கடுமையான பிளவு ஏற்பட்டிருக்கின்றது என்பதும், பழனிவேலுவின் கோட்டையாகக் கருதப்பட்ட சிலாங்கூர் மாநிலம் சுப்ரா பக்கம் சாயத்தொடங்கியிருக்கிறது என்பதும் ஆகும்.
சிலாங்கூர் மாநிலச் செயலாளர் பார்த்திபன், பொருளாளர் ரவி, துணைச் செயலாளர் டத்தோ முத்து ஆகிய முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டதன் வழி சுப்ராவுக்கு ஆதரவுக்குத் தெரிவித்திருக்கின்றனர்.
இவர்களைத் தவிர சிலாங்கூரிலுள்ள சில முக்கியத் தொகுதித் தலைவர்களும் சுப்ராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கிள்ளான் தொகுதித் தலைவர் செனட்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன், பூச்சோங் தொகுதி தலைவர் சக்திவேல், கிளானா ஜெயா தலைவர் டத்தோ முத்து, உலு லங்காட் தலைவர் டத்தோ பாலகிருஷ்ணன், ஷா ஆலாம் தொகுதித் தலைவர் முருகவேல் போன்றவர்களும் பழனிவேலுவுக்கு எதிராகத் திரும்பியுள்ளதால் சிலாங்கூர் மாநிலம் இரண்டாகப் பிளவுபட்டு விட்டது.
மற்றொரு எதிர்பாராத திருப்பம் பகாங் மாநிலத் தலைவர் டத்தோ குணசேகரனின் மனமாற்றமாகும். பழனிவேலுவால் சிலர் மாதங்களுக்கு முன்னால் செனட்டராக நியமனம் பெற்ற இவர் பழனிவேலுவின் நெருக்கமான ஆதரவாளராகக் கருதப்பட்டவர்.
நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர் எல்.மாணிக்கம், துணையமைச்சர் கமலநாதன், ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற அரசியல் முக்கிய புள்ளிகளாவர்.
இவர்களைத் தவிர பேராக், கெடா, பினாங்கு மாநிலத்தின் சில முக்கியத் தொகுதித் தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.