Home நாடு சுப்ரா சந்திப்புக் கூட்டத்தில் ஆதரவு தெரிவித்து 80க்கும் மேற்பட்ட தொகுதி தலைவர்களும் பிரதிநிதிகளும்!

சுப்ரா சந்திப்புக் கூட்டத்தில் ஆதரவு தெரிவித்து 80க்கும் மேற்பட்ட தொகுதி தலைவர்களும் பிரதிநிதிகளும்!

584
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 24 – மஇகாவில் எழுந்துள்ள சர்ச்சைகளைத் தொடர்ந்து மஇகா தொகுதித் தலைவர்களுக்கு நேரடியாக அழைப்பு விடுத்து கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் இன்று மாலை கூட்டிய கூட்டத்தில் ஏறத்தாழ 70க்கும் மேற்பட்ட தொகுதித் தலைவர்களும், பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு அபரிதமான ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

Datuk Seri Dr S.Subramaniam

கட்சியில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளுக்கு இடையில், துணைத் தலைவருக்கு கூட்டம் கூட்டவும், சங்கப் பதிவக விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கவும் நான் அதிகாரம் வழங்கவில்லை என தேசியத் தலைவர் பழனிவேல் பகிரங்கமாக பத்திரிக்கை அறிக்கையின் வழி அறிவித்த பின்னரும் சுப்ராவுக்கு கிடைத்திருக்கும் இந்த அபரிதமான ஆதரவு மஇகாவில் ஏற்பட்டிருக்கும் முக்கிய திருப்பு முனையாகக் கருதப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இன்று மாலை, கோலாலம்பூரில் உள்ள கிராண்ட் சீசன்ஸ் தங்கும் விடுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தொகுதித் தலைவர்களுக்கு மட்டுமே கண்டிப்பாக அனுமதி என டாக்டர் சுப்ரா தெளிவாக அறிவித்ததாகவும், பத்திரிக்கையாளர்களுக்கு உள்ளே நுழைய அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட சில தலைவர்கள் தெரிவித்தனர்.

அதன்படி, கலந்து கொண்ட அனைவரும் கூட்ட வருகையாளர் பதிவுப் புத்தகத்தில் கையெழுத்திட்டதாகவும், அந்தப் பதிவேட்டின்படி ஏறத்தாழ 70 தொகுதித் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வரமுடியாத ஒரு சில தொகுதித் தலைவர்கள் தங்களின் பிரதிநிதிகளை இந்தக் கூட்டத்திற்கு அனுப்பி வைத்ததாகவும், மேலும் சில தொகுதிகளில் பொறுப்பாளர்களிடையே ஏற்பட்டுள்ள பிளவுகள், தலைமைத்துவப் போராட்டங்கள் காரணமாக தலைவர்கள் அல்லாத மற்ற பொறுப்பாளர்கள் தத்தம் தொகுதிகளைப் பிரதிநிதித்து கலந்து கொண்டதாகவும் தெரிகின்றது.

சுப்ராவுக்கு நெருக்கமான சில தலைவர்கள்கூட அவர்கள் தொகுதித் தலைவர்கள் இல்லாத காரணத்தால் கூட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை.

மஇகாவில் உள்ள மொத்த தொகுதிகளில், ஏறத்தாழ பாதிக்கும் மேற்பட்ட தொகுதித் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பது, கட்சியில் டாக்டர் சுப்ராவுக்குப் பெருகி வரும் ஆதரவையும், தொடர்ந்து பழனிவேலுவுக்கு ஏற்பட்டு வரும் சரிவையும் தெளிவாக எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.