புதுடெல்லி, பிப்ரவரி 21 – வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஆயுட்கால விசா வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியா வந்து செல்ல அதிக பட்சம் 15 ஆண்டுகள் வரை விசா அளிக்கப்பட்டு வந்தது.
இந்த விசாவில் வருபவர்கள் அடிக்கடி காவல் நிலையத்துக்கு சென்று தாங்கள் இந்தியாவில் தொடர்ந்து தங்கி இருக்கிறோம் என்பதை தெரிவிக்க வேண்டும். இதனால் பல கஷ்டங்கள் ஏற்படுவதாக வெளிநாட்டு இந்தியர்கள் புகார் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஆயுள் கால விசா வழங்க இந்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக கடந்த ஜனவரி 6-ஆம் தேதி அவசர சட்டமும் இயற்றப்பட்டது. அவசர சட்டங்கள் 6 மாதம் வரை மட்டுமே செல்லுபடியாகும்.
அதற்குள் நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும். குடியுரிமை அவசர சட்டம் தவிர காப்பீட்டு துறையில் அன்னிய முதலீடு தொடர்பான அவசர சட்டம் என மொத்தம் 6 அவசர சட்டங்களை கடந்த மாதம் மத்திய அரசு இயற்றியது.
இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இதை தொடர்ந்து வரும் 23-ஆம் தேதி கூடவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த அவசர சட்டங்களை முறையாக தாக்கல் செய்து சட்டமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக குடியுரிமை அவசர சட்டத்துக்கான திருத்த மசோதா தயார் செய்யப்பட்டு அதற்கு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதன்படி வெளிநாட்டு இந்தியர்களுக்கு இனி இந்தியா வந்து செல்ல ஆயுட்கால விசா வழங்கப்படும். வெளிநாட்டவர்கள் இந்தியர்களை மணந்து கொண்டால் ஒரு ஆண்டுக்கு பின்னரே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது.
மேலும் அவர்கள் தொடர்ந்து ஒரு ஆண்டு இந்தியாவில் தங்கியிருக்க வேண்டும். இந்த விதிமுறை சிறிது தளர்த்தப்பட்டு, 30 நாட்களுக்கு மிகாமல் அவர்கள் சொந்த நாடு திரும்பலாம் என சட்ட திருத்தத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.