புத்ராஜெயா, மார்ச் 19 – முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மீது கடந்த 2006-ம் ஆண்டு மிளகுப் பொடி நீர் பீய்ச்சி அடித்த வணிகரை மேல்முறையீட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
டத்தோ நிக் சபியா யூசோஃப் என்ற அந்த வணிகர் மீது, கடந்த 2006 ஜூலை 28-ம் தேதி பெங்காலான் செபாவில் உள்ள சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையத்தில் துன் மகாதீர் மீது மிளகுப் பொடி நீரை பீய்ச்சி அடித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த கோத்தபாரு நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு நிக் சபியாவுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்தது.
எனினும், நிக் சபியா மீதான குற்றச்சாட்டை அரசுத் தரப்பு சந்தேகங்களுக்கு இடமின்றி நிரூபிக்கவில்லை என்று கூறி 2012-ம் ஆண்டு இந்த வழக்கிலிருந்து நிக் சபியாவை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதையடுத்து, அவரது விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நிலைநிறுத்துவதாக தற்போது அறிவித்துள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நிக் சபியா, கடந்த 8 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கில் அதிர்ஷ்டம் தன் பக்கம் இருந்ததாக தெரிவித்தார்.