கோலாலம்பூர், மார்ச் 21 – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மகள் நூர்யானா நஜ்வாவுக்கு திருமணப் பரிசாக 5 லட்சம் அமெரிக்க டாலர் கிடைத்ததாக வெளியான தகவலை கூட்டரசுப் பிரதேச மத இலாகா (ஜாவி) மறுத்துள்ளது.
நூர்யானா நஜ்வாவின் திருமணச் சான்றிதழ் என்ற பெயரில் சமூக வலைத் தளங்களில் வலம் வந்த சான்றிதழ் போலியானது என்று ஜாவி இயக்குநர் பைமுசி யாயா தெரிவித்துள்ளார்.
உண்மையான திருமணச் சான்றிதழில்தான் ‘மஸ் காவின்’- Mas Kahwin (வரதட்சணை) தொகை எவ்வளவு என்பது விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
“இணையம் வழி பரவியது போலியான சான்றிதழ் என்பதை வலியுறுத்துகிறோம். ஏனெனில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள வரதட்சணை தொகை மற்றும் திருமண பரிசு குறித்த விவரங்கள் உண்மை அல்ல. மேலும் அந்த போலிச் சான்றிதழில் ஜாவி திருமண பதிவாளரின் கையெழுத்தும் இல்லை,” என பைமுசி சுட்டிக் காட்டினார்.
இதையடுத்து ஜாவி வெளியிட்டுள்ள உண்மையான திருமணச் சான்றிதழில் நூர்யானா நஜ்வா வரதட்சணையாக வெ.5 ஆயிரம் மட்டுமே வரதட்சிணை பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் திருமண பரிசுக்குரிய பகுதியில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
நூர்யானா நஜ்வாவின் திருமணம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவரது திருமணச் சான்றிதழ் என்று குறிப்பிடப்பட்டு, சமூக வலைதளங்களில் ஒரு சான்றிதழ் வலம் வந்தது. அதில் அவர் 5 லட்சம் அமெரிக்க டாலரை திருமணப் பரிசாக பெறுவார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.