வாஷிங்டன், மார்ச் 28 – ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆக்கிரமிப்பு மற்றும் உள்நாட்டுப்போர் போன்றவற்றால் சிரியா கடந்த 2011–ஆம் ஆண்டு முதல் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது.
சிரியா அதிபர் பஷார் அல்–ஆசாத்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், சிரியாவில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி சமீபத்தில் கூறுகையில், ‘சிரியாவில் அமைதியை ஏற்படுத்த அந்த நாட்டு தலைவருடன் அமெரிக்கா பேச்சு நடத்த வேண்டும்’ என்று கூறினார். ஆனால் இந்த விவகாரத்தில் ஆசாத்திடம் ஒருபோதும் பேரம் பேசமாட்டோம் என அமெரிக்கா பின்னர் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த சிரியா அதிபர் ஆசாத், ஜான் கெர்ரியின் அறிவிப்பு குறித்து கூறுகையில், ‘ஒவ்வொரு பேச்சுவார்த்தையும் சாதகமான அம்சம்தான். எனவே பரஸ்பர மரியாதை அடிப்படையில் அமெரிக்கா உள்பட யாருடனும் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்’ என்று கூறினார்.
எனினும் டமாஸ்கஸ் மற்றும் வாஷிங்டன் இடையே நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்று கூறிய ஆசாத், சிரியாவின் இறையாண்மைக்கு பாதிப்பின்றி நிகழும் எந்த பேச்சுவார்த்தையும் வரவேற்கத்தக்கதுதான் என்று தெரிவித்தார்.