ஸ்ரீநகர், மார்ச் 30 – காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜீலம் நதி அபாய கட்டத்தை எட்டி உள்ளதால் தலைநகரான ஸ்ரீநகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பூஞ்ச் மாவட்டம் லாடன் கிராமத்தில் 25 பேர் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டனர். இவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெய்த கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கில் இருந்து காஷ்மீர் மாநிலம் இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில் தற்போது மீண்டும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
கொட்டி தீர்க்கும் கனமழையால் காஷ்மீரில் உள்ள நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் இதுவரை 8 வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. மேலும் 26 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சாலைகள், பாலங்கள் நீரில் மூழ்கி இருப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் சாலை மூடப்பட்டுள்ளது.
முக்கிய பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், மழையில் தீவிரம் அதிகரித்து வருவதாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளத்தாக்கு பகுதிகள் பலவற்றை வெள்ளம் சூழ்ந்துள்ளால், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
ஜீலம் நதி அபாய கட்டத்தை எட்டி உள்ளதால் ஸ்ரீநகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றங்கரைகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு காஷ்மீர் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுவரை பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கொடுத்து ஓடுவதுடன், காஷ்மீர் மாநிலமே ஸ்தம்பித்துள்ள நிலையில் மேலும் 6 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கனமழை ஒருபுறமும், வெள்ளப் பெருக்கு ஒரு புறமும் அதிகரித்து வருவதால் காஷ்மீர் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்பதற்காக சுமார் 100 தேசிய பேரிடர் மேலாண்மை குழு வீரர்கள் ஸ்ரீநருக்கு விரைந்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் அனைவரும் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும், அது தொடர்பான அறிக்கைகளையும் உடனடியாக அளிக்க வேண்டும் எனவும் அரசு நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தொடர்ந்து நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மீட்புப் பணிகளும் நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் தெரிவித்துள்ளார்.