சிட்னி, மே 3 – பாலி நைன் வழக்கில் இந்தோனேசிய அரசால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆஸ்திரேலியர்களான மயூரன் சுகுமாறன் மற்றும் ஆண்ட்ரூ சான் ஆகிய இருவரின் உடல்களும் விமானம் மூலம் நேற்று சிட்னி சென்றடைந்தன.
மரண தண்டனையை எதிர்நோக்கி இருந்த தனது காதலன் ஆண்ட்ரூ சானை, கரம் பிடித்த புது மனைவி ஃபெபி மற்றும் மயூரனின் குடும்பத்தினரும், அவர்கள் இருவரின் உடல்களை சிட்னி விமான நிலையத்தில் பெற்றுக் கொண்டனர். விமான நிலையத்தில் காத்திருந்த அவர்களிடம் உடல்கள் கொண்டு வரப்பட்ட செய்தி அறிந்தவுடன் சானின் மனைவி ஃபெபி கதறி அழுதார். அவரை மயூரனின் தாய் ராஜி தேற்றினார்.
உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு பின்னர் அவர்களின் உடல்கள் விரைவில் அடக்கம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, இனி இந்தோனேசியாவுடன் ஆஸ்திரேலியாவின் நட்புறவு எத்தகையதாக இருக்கும் என்ற கேள்விக்கு டோனி அபோட் கூறியதாவது:-
“பாலி நைன் கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது மிகவும் கொடுமையான ஒன்று. இது குறித்த நமது கோபம் ஞாயமானதாக இருந்தாலும், இந்தோனேசியாவின் இறையாண்மையை நாம் மதித்தாக வேண்டும். ஆனால், இரு நாடுகளின் உறவு, நடந்து முடிந்த இந்த சம்பவத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியர்கள் கொல்லப்பட்ட சில மணி நேரங்களில், இந்தோனேசியாவிற்கான ஆஸ்திரேலியத் தூதரை அந்நாட்டு அரசு திரும்ப அழைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.