Home மலேசியா 1எம்டிபியின் முக்கிய நிறுவனத்தை வாங்க ஐஜெஎம் விருப்பம்!

1எம்டிபியின் முக்கிய நிறுவனத்தை வாங்க ஐஜெஎம் விருப்பம்!

665
0
SHARE
Ad

1MDB.கோலாலம்பூர், மே 4 – மலேசியாவின் மிக முக்கிய கட்டுமான நிறுவனங்களுள் ஒன்றான ‘ஐஜெஎம் கார்ப்பரேஷன் பெர்ஹாட்’ (IJM Corp Bhd), ‘1எம்டிபி’ (1MDB)-ன் சொந்த நிறுவனமான ‘எட்ரா குளோபல் எனர்ஜி’ (Edra Global Energy) நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுமார் 13 பில்லியன் ரிங்கிட் மதிப்பு கொண்ட ஐஜெஎம் நிறுவனம், எட்ரா நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்நிறுவனம், இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை இதுவரை வெளியிடவில்லை என்றாலும், முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக வர்த்தக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

பிரதமர் நஜிப்பின் சிந்தனையில் உருவான அரசு சார்பு முதலீட்டு நிறுவனம் 1எம்டிபி, அண்மைக் காலங்களில் பல கண்டனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் உள்ளாகியுள்ளது. முன்னாள் பிரதமர் துன் மகாதீரும், நஜிப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் 1எம்டிபி நிறுவனம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும், பொருளாதாரச் சிக்கல்களுக்கு ஆளான 1எம்டிபி நிறுவனம், கடந்த மார்ச் மாதம் தான் எட்ரா குளோபல் எனர்ஜி நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதற்காக நிதி அமைச்சகம், சிஐஎம்பி வங்கிக் குழுமத்திடமும் ஆலோசனை கேட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு முன்னேற்பாடுகள் நடைபெற்றாலும், பின்னர் அவை அனைத்தும் கைவிடப்பட்டன.

இந்நிலையில் தான், ஐஜெஎம் நிறுவனம், எட்ரா நிறுவனத்தை வாங்குவதற்கு ஆர்வமாக உள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், இது தொடர்பாக முக்கிய நிதி அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஐஜெஎம், எட்ராவை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படும் தகவல்களுக்கு எத்தகைய ஆதாரமும் இல்லை. எனினும், அதனை மறுக்கவும் முடியாது. ஆனால், எட்ரா நிறுவனம் விற்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.