காட்மாண்டு, மே 4- நேபாளில் காணாமல் போன இரு மலேசிய மலையேற்ற வீரர்கள் குறித்து இதுவரை புதுத் தகவல் ஏதும் இல்லை. இருவரும் காணாமல் போன பிறகு அவர்களைப் பற்றி நேபாள் காவல்துறை மற்றும் அந்நாட்டு மீட்பு மற்றும் தேடுதல் குழுவிடமிருந்து எத்தகைய புதுத் தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை என அங்குள்ள மலேசிய தூதரக அதிகாரி ஃபடில் அடிலா தெரிவித்துள்ளார்.
வர்த்தகரான டென்னிஸ் லீ (47 வயது) என்ற மலேசியர் (படம்) கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி வடக்கு நேபாள பகுதியில் மலையேறும்போது மாயமானார். இதேபோல் சாய் ஜெயராஜ் அந்தோணி (37 வயது) என்ற மற்றொரு மலேசியரை ஏப்ரல் 21ஆம் தேதி முதல் காணவில்லை.
இந்நிலையில்தான் நேபாளத்தைக் கடும் பூகம்பம் தாக்கியிருந்தது. பூகம்பத்திற்குப் பிறகு இருவர் குறித்தும் எந்தவொரு புதுத் தகவலும் இல்லை.
இருவரில் அந்தோணி புதுடெல்லி வழியாக நேபாளம் சென்றதாகவும், கடைசியாக லங்டாங் என்ற பகுதியில் இருந்து தங்களைத் தொடர்பு கொண்டதாகவும் அவரது குடும்பத்தார் மலேசிய தூதரகத்திடம் தெரிவித்துள்ளனர்.
நேபாள அதிகாரிகளுடன் தாம் தொடர்ந்து பேசி வருவதாக
குறிப்பிட்டுள்ள தூதரக அதிகாரி ஃபட்லி, இரு மலேசியர்கள் மாயமான
பகுதிகளில் பூகம்பத்திற்கும் முன்பே பல்வேறு பனிச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது என நேப்பாள அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் நோக்கத்துடன் அங்கு சென்றுள்ள ஜோகூர், மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் (UTM) சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் தற்போது நாடு திரும்பப் போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
பூகம்பத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 மலையேற்ற வீரர்கள்
பலியானதால் மலையேற்றத்திற்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. எனினும் இந்தத் தடை விலக்கப்பட்டதும், திட்டமிட்டபடி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறப்போவதாக மலேசியக் குழுவினர் கூறியுள்ளனர்.