மும்பை, மே 8 – மது அருந்திவிட்டு கார் ஓட்டி, ஒருவரை கொன்ற வழக்கில் நேற்று முன்தினம் பாலிவுட் நடிகர் சல்மான் கானிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி தேஷ்பாண்டே உத்தரவிட்டார்.
இது தவிர, ஓட்டுநர் உரிமை அட்டை இல்லாமல் கார் ஓட்டியதற்காக 2 மாத சிறை தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பைக் கேட்ட சல்மான் கான் நீதிமன்றத்திலேயே மனமுடைந்து அழுதார்.
அன்று மாலையே அவருக்கு மும்பை உயர்நீதிமன்றம் 48 மணி நேர ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து சிறை செல்லாமலேயே தனது வீட்டுக்கு திரும்பினார் சல்மான்கான்.
இந்நிலையில் இன்று சல்மான்கான் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் தொடங்குகிறது. அப்போது சல்மான்கானின் ஜாமீன் நீட்டிக்கப்படுமா அல்லது ஜாமீன் ரத்து செய்யப்படுமா என்று பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒருவேளை ஜாமீன் நீட்டிக்கப்படவில்லை என்றால் சல்மான் சிறை செல்வது உறுதியாகிவிடும். 13 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கு கடந்த மாதம் இறுதிக்கட்டத்தை எட்டியது.
இரு தரப்புக்கும் இடையே இறுதி கட்ட வாதங்கள் நடைபெற்றன. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் சல்மான் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.