கோலாலம்பூர், மே 15 – (அம்னோவில் எழுந்துள்ள உட்கட்சிப் போராட்டத்தைத் தொடர்ந்து நஜிப் அதிரடியான அமைச்சரவை மாற்றங்களை ஏற்படுத்துவாரா என்ற கண்ணோட்டத்தில் மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி வழங்கும் கட்டுரை )
பிரதமர் பதவியிலிருந்து டத்தோஶ்ரீ நஜிப்பை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில் திடமான போர்க் குரலை அழுத்தமாக பதிவு செய்து வரும் துன் மகாதீர், அதில் வெற்றி பெற சாத்தியம் இருக்கிறதா?
அல்லது துன் அப்துல்லா படாவி மாதிரி நஜிப்பை ஓட்டம் பிடிக்க வைக்க சாத்தியம் இல்லாமல் நஜிப்பின் எதிர் நடவடிக்கையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் மகாதீர் ஓய்ந்து போய் அடங்கி விடுவதற்கான சாத்தியம் இருக்கிறதா?
என்றெழும் இப்படிப்பட்ட ஆயிரமாயிரம் கேள்விகளுக்கான பதிலை, மக்கள் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். எனவே மலேசிய அரசியலில், அதுவும் அம்னோவின் அசைக்க முடியாத முக்கியத் தலைவராகவும்,
இன்னும் சொல்லப் போனால் நாட்டின் முக்கிய பல முடிவுகளுக்கு மூளையாகவும் இருக்கிற மகாதீர், ஒரு நடப்பு பிரதமரை பதவியை விட்டுப் போகச் சொல்லுபவராகவும் தற்போது இருக்கிறார் என்பது மகாதீருக்கான பலமே.
அந்தப் பலத்தை, மேலும் வலுவூட்டுவதாக அமையுமா?அல்லது ஒரு வெத்து வேட்டுச்சத்தத்துடன் அது அடங்கி போய்விடுமா என்ற கேள்வியின் வட்டம்!
இப்போது ஆளுங்கட்சி வட்டத்தை மட்டுமல்ல, எதிர்க்கட்சி வட்டாரத்தையும் ஓரு கலக்கு கலக்கிக்கொண்டுதான் இருக்கிறது. எது எப்படியிருப்பினும் இப்போது மகாதீர் படுபயங்கரமாக முன் வைத்துள்ள பிரச்சனை அல்லது குற்றச்சாட்டுகள் “சத்து மலேசியா மேம்பாட்டு நிறுவனம்” குறித்துதான்.
அதேவேளை அந்நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள தொடர் நடவடிக்கையின் மூலம், ஏறபட்டுள்ள இலாப நட்ட கணக்கு மறு விவகாரத்தின் மற்றொரு எதிரொலியாக விளைந்துள்ளது .
அதுதான், இன்றைய அரசியல் நெருக்கடிக்கான பின் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஆம்! அந்த விளைவுதான் பிரதமர் பதவியிலிருந்து நஜிப் விலகுவதற்குரிய காரணத்தின் அடித்தளமாகும்.
அப்படியொரு பதவி மாற்றத்தின் விளைவாக டான்ஶ்ரீ மொகிதீன் பிரதமர் பொறுப்புக்கு வருவதும், அதையொட்டி மகாதீர் மகன் டத்தோஶ்ரீ முக்ரீசின் அரசியல் எதிர்காலம் குறித்து தீர்க்கமான முடிவெடுப்பதுமாகும்.
இந்த அடிப்படையில் மகாதீரும் அவரின் ஆதரவுக் கூட்டணியினரும் பிரதமர் பதவியைச் சுற்றி சுழன்று வருகின்றனர் என்பது ஓரளவு உறுதியான விசயமென்றாலும், அந்த நோக்கத்தை நகர்த்திச் செல்ல மகாதீருக்கு ஒரு துருப்புச் சீட்டாக அமைந்திருப்பதுதான் இந்த “சத்து மலேசிய மேம்பாட்டு நிதி நிறுவனம்” மீது அவர் அள்ளி வீசுகின்ற குற்றச்சாட்டுகளாகும்.
இதுவரை அவரால் நகர்த்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அதற்குரிய பதிலைச் சொல்கின்ற இடத்தில் நஜிப் இருக்கிறார் என்பதில் பெரியளவிலான வேறுபாடுகள் இல்லையென்றாலும், அவரின் தற்போதைய அணுகு முறையைப் பார்த்தால், அவரை அரசியலிருந்து வீழ்த்துவதற்கு, ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்த மகாதீரும் அவரின் நெருங்கின கூட்டமும் திட்டமிட்டு செயல்படுவதாக நஜிப் கருத இடமளித்திருக்கிறது என்றே தெரிகிறது.
இருப்பினும் மகாதீர் நினைப்பதுபோல, அவ்வளவு எளிதாக படாவியை தூக்கி எறிந்தது மாதிரி, நஜிப்பைத் தூக்கி எறிந்திட முடியாது என்றே தெரிகிறது. அதனால்தான் அண்மையில் நஜிப் சிங்கப்பூருக்கு திடீர் வருகையை மேறகொண்டார்.
சிங்கப்பூரை முன் வைத்த அரசியல்:
கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்ற நஜிப் – லீ சியென் லுங் இடையிலான சந்திப்பின்போது
பிரச்சனைக்குரிய அந்த வளைவு பாலத் திட்டத்துடன் ஏனைய மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் இருநாட்டு பிரதமர்கள் பேசி, ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.
அதனால் சிங்கப்பூரை முன்வைத்து அரசியல் நடத்த எண்ணிய மகாதீர் எண்ணத்தில் தற்போது மண் விழுந்திருப்பதாகவே தெரிகிறது. முதல்கட்டமாக மகாதீருக்கு எதிரான வியூகத்தை சிங்கப்பூரில் நஜிப் முடித்திருக்கிறார்.
அடுத்து, அவர் இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத துவக்கத்திலோ அமைச்சரவையில் குறிப்பிட்டுச் சொல்லும் படியான பெரிய மாற்றத்தைச் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த மாற்றத்தின் எதிர் விளைவாக அம்னோவின் வழக்கமான பதவி பரிமாற்றங்கள் போல, அது இல்லாமல், கடந்த காலத்தில் மகாதீர் செய்தது போன்று அதிரடியான மாற்றமாகவே இருக்கும் என்றே தெரிகிறது.
இந்த அமைச்சரவை மாற்றத்தில், அம்னோ மட்டுமல்ல மசீச, மஇகா போன்ற கட்சிகளுக்கான அமைச்சர் பதவிகளிலும் பலர் எதிர்பார்க்காத திடீர் திருப்பங்கள் நிகழலாம் என்று தெரிகிறது.
இதனால் சிலருக்கு பதவி உயர்வும் சிலருக்கு பதவி இறக்கமும் ஏற்படலாம். இந்த பதவி மாற்றத்தினால் எதிர்க்கட்சியினரிடம் கள்ளவுறவு வைத்துக்கொண்டு, சொந்த கட்சிக்கு கீழறுப்பு வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்ற அடிப்படையில் எழுந்த குற்றச்சாட்டிற்கு வலுவான ஆதாரத்தை முன் வைத்து சிக்கியுள்ளவர்களுக்கு, எதிராகவும் இந்த பதவி மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, நஜிப் தான் எதிர்கொண்டுள்ள எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் சரியான பதிலடி கொடுத்து தற்போதைய நெருக்கடியிலிருந்து விடுபடுவார் என்றே அம்னோ தலைமைத்துவம் எதிர்பார்க்கிறது.
அதையொட்டியே அவர் பலமுறை தனக்குரிய ஆதரவை அம்னோ தலைமைத்துவம் மூலம் உறுதிப்படுத்தியும் உள்ளார். அதேவேளை பல மாநில மந்திரி புசார்களின் ஆதரவையும் அவர் பெற்றும் இருக்கிறார்.
குறிப்பாக, கெடா அம்னோவின் ஆதரவை அவர் ஏகமனதாகப் பெற்றிருந்தாலும், மந்திரி புசார் என்றளவில் முக்ரிஸ் மகாதீர் ஆதரவைப் பெற அவர் தவறி இருப்பினும் புதிய மந்திரி புசார் என்றளவில் பதவி மாற்றம் நிகழுமேயானால், அந்த மந்திரி புசார் மூலமாக அவருக்குரிய ஆதரவைப் பெறுவது அவ்வளவு பெரிய விசயமாக இருக்காது என்றே தெரிகிறது.
எனவே, இதுவரை அம்னோ அரசியல்தான் இந்த நாட்டு அரசியல் என்பதைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வந்துள்ளதால், நஜிப் தன்னை வலுவான பிரதமர் என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள தற்போதைய நெருக்கடியிலிருந்து நிச்சயமாக மீண்டெழுவார் என்றே அரசியல் பார்வையாளர்களும் நம்புகின்றனர் .
-பெரு.அ.தமிழ்மணி
(இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளர் பெரு.அ.தமிழ்மணியின் சொந்த, தனிப்பட்ட கருத்துகளாகும். அந்தக் கருத்துகள் செல்லியலின் கருத்துகளோ, செல்லியலைப் பிரதிபலிக்கும் கருத்துகளோ அல்ல. கட்டுரையாளரின் கருத்துகளுக்கு செல்லியல் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.
இந்த கட்டுரையையோ, அல்லது அதன் பகுதிகளையோ மறுபிரசுரம் செய்ய வேண்டுமென்றால், கட்டுரையாளரை நேரடியாகத் தொடர்பு கொண்டு அனுமதி பெறவேண்டும்.
தமிழ்மணியின் மற்ற எழுத்துப் படிவங்களை maravan madal tamil mani என்ற முகநூல் (பேஸ்புக்) அகப்பக்கத்தில் காணலாம். அவரைப் பின்வரும் இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:
wrrcentre@gmail.com