பெய்ஜிங், மே 15 – சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி, நேற்று சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் சொந்தவூரான ஷான்சி மாகாணம், ஸியான் நகருக்கு சென்றிருந்தார். அங்கு புகழ்பெற்ற டா ஜிங்ஷான் கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
மோடி தங்கள் ஊருக்கு வருகை தந்திருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள், அவரை காண குவிந்து விட்டனர். தனது வழிபாட்டை முடித்துக் கொண்டு மோடி, தனது காரில் புறப்பட்டார். அப்போது அந்த மக்கள் அவரைப் பார்த்ததும் “மோடி….மோடி” என உற்சாகத்தில் குரல் கொடுத்தனர்.
தான் வெளிநாட்டுப் பிரதமர் என்று அறிந்து இருந்தும் அந்த மக்கள் காட்டிய அன்பில் மோடி நெகிழ்ந்து போனார். உடனடியாக தனது காரை நிறுத்துமாறு கூறிய மோடி, காரை விட்டு இறங்கி அந்த மக்களுடன் மிகவும் நெருக்கமாக கலந்துரையாடினார். இதனால் அந்த மக்கள் மேலும் உற்சாகம் அடைந்தனர்.
உடன் வந்திருந்த அதிகாரிகளுக்கோ, மோடியின் பாதுகாப்பில் பெரும் கவலை ஏற்பட்டது. அதனால் அவர்கள், அவரைச் சுற்றி ஒரு கேடயம் போல் சூழ்ந்து கொண்டனர். அந்த மக்களுடன் சுமார் 15 நிமிடங்கள் செலவிட்ட மோடி அதன் பிறகு அங்கிருந்து சென்றார். அவரது கார் மறையும் வரை அவரது பெயர் ஒலித்துக் கொண்டிருந்தது.
எங்கு சென்றாலும், மக்களுடன் தன்னை இணைத்துக் கொள்வதில் மோடியைத் தவிர உலக அளவில் வேறு தலைவர்கள் யாரும் இல்லை என சீனப் பத்திரிக்கைகள் சமீபத்தில் அவரை பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.