சியோல், மே 19 – தென் கொரிய அதிபர் பார்க் கியூன் ஹேவுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சீனா, மற்றும் மங்கோலிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று காலை தென் கொரியா சென்றார். தலைநகர் சியோலில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சியோலில் உள்ள தேசிய நினைவிடத்தில் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் தென் கொரிய வாழ் இந்தியர்களிடையே மோடி உரையாற்றினார்.
அப்போது, அவர், கடந்த ஓராண்டில் இந்தியா மீதான உலக நாடுகளின் கண்ணோட்டத்தில் பெரும் மாறுதல் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.
பொருளாதார வளர்ச்சி அதி வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியாவை உலக நாடுகள் உற்று நோக்குகிறது என்றும் அவர் கூறினார். நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, தென் கொரிய அதிபர் பார்க் கியூன் ஹேவுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு உள்ளிட்ட 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
7 ஒப்பந்தங்களும் கையெழுத்தான பிறகு, தென்கொரிய தொழில் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மோடி, இந்தியாவில் தொழில் முதலீடுகள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.
இதன் மூலம் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முதலீடுகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.