உலன் பெடோர், மே 18 – மங்கோலியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் அழகிய குதிரை ஒன்றை பரிசாக அளித்துள்ளார். சீனப்பயணத்தை முடித்துக் கொண்டு மங்கோலியா சென்றுள்ளார் இந்தியப் பிரதமர் மோடி.
தலைநகர் உலன் பெடோரில் உள்ள சிங்கிஸ் கான் அனைத்துலக விமான நிலையத்தில் இறங்கிய மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மங்கோலிய பிரதமர் சிமட் சைக்ஹான்பிலெக்கை மோடி சந்தித்துப் பேசினார்.
பின்னர் சிமட் – மோடி முன்னிலையில் இந்தியா – மங்கோலியா இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மங்கோலிய நாடாளுமன்றத்திலும் மோடி உரையாற்றினார்.
அப்போது இந்தியாவின் சிறப்புகள் குறித்து அவர் பேசினார். பிரதமர் மோடிக்கு மங்கோலியா பிரதமர் சிமட் சைக்கான்பிலெக், அழகிய குதிரை ஒன்றை நினைவுப் பரிசாக அளித்தார்.
பிரதமர் மோடியும், மங்கோலிய அதிபருக்கு, 13-வது நூற்றாண்டைச் சேர்ந்த மங்கோலியர்களின் வரலாறு குறித்த ஓலைச் சுவடியின் புதுப்பித்த பிரதியை பரிசாக அளித்தார். மங்கோலியா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.