ஜாகர்த்தா, மே 20 – பாகிஸ்தானில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த இந்தோனேசியத் தூதர் நேற்று செவ்வாய்க்கிழமை மரணமடைந்ததாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜாகர்த்தாவுக்குக் கொண்டுவரப்பட்ட பாகிஸ்தானுக்கான இந்தோனேசியத் தூதர் புர்கான் முகமட் நல்லுடலுக்கு இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ மரியாதை செலுத்துகின்றார்
கடந்த 8ஆம் தேதி அன்று வடக்கு பாகிஸ்தானில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் பறந்து கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது.
கில்ஜிட் பகுதியிலுள்ள ஒரு பள்ளிக் கட்டடத்தின் மீது விழுந்து அது
நொறுங்கியது. இதில் நோர்வே, பிலிப்பைன்ஸ் நாட்டுத் தூதர்களும்,
பாகிஸ்தானுக்கான மலேசியத் தூதரின் மனைவியும் சம்பவ இடத்திலேயே
பலியாகினர்.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இந்தோனேசிய தூதர் புர்கான் முகமட் (58
வயது) தனது மனைவியுடன் இருந்தார். விபத்தில் அவருக்குப் பலத்த தீக்காயம்
ஏற்பட்டது. இதையடுத்து விபத்துப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட அவர், கடந்த வாரம்
சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் விபத்து நடந்த 11 நாட்களுக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி
அவர் மருத்துவமனையில் உயிர் இழந்தார். புர்கான் முகமட்டுக்கு மனைவியும் இரு
மகன்களும் உள்ளனர்.
முன்னதாக இந்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக தாலிபான் இயக்கம்
அறிவித்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறே விமான விபத்துக்கு காரணம் என
பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.