புதுடெல்லி, மே 21 – சினிமாவில் தற்போது புகைப் பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றால் அதன் கீழே எச்சரிக்கை வாசகம் ஓடுவது வழக்கம்.
இதை நீக்கக் கோரித் திரைப்படத் துறையினர் மத்தியத் தகவல் ஒலிபரப்புத் துறைக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்துச் சுகாதாரத் துறை அமைச்சகத்துடன் ஆலோசனை செய்யப்படும் என்று தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ள நிலையில்,அடையாறு மருத்துவமனைத் தலைவர் டாக்டர் வி.சாந்தா,பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: “பொது மக்கள் நலன் கருதித் திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்.
சில திரைப்படங்களில் புகைப் பிடிக்கும் காட்சிகளின் போது எச்சரிக்கை வாசகம் இடம் பெறுவதில்லை. இது விதி மீறல் ஆகும்.
எனவே இதில் பிரதமராகிய தாங்கள் தலையிட்டு, விதி மீறல்களைத் தடுக்கவும்,இளைய தலைமுறையினர் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என வேண்டுகோள் விடுத்துள்ளார்.