சென்னை, மே 21 – தமிழ்நாட்டில் தமிழ்ப் படங்களைக் காட்டிலும் ஆங்கிலப் படங்களின் வியாபாரம் அதிகரித்து கொண்டிருக்கிறது.
அண்மையில் வெளியான “பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்-7” மற்றும் “அவெஞ்சர்ஸ்” ஆகிய இரண்டு படங்களின் வசூலும் எல்லோரையும் ஆங்கிலப் படத்தின் பக்கம் பார்க்கவைத்திருக்கிறதாம்.
இதனால் ஜூன்12 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கும் ‘ஜூராசிக் வேர்ல்டு’ என்கிற ஆங்கிலப் படத்தின் தமிழக உரிமையை வாங்க தமிழ்த் திரையுலகின் பெரிய திரைப்பட நிறுவனங்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதுபோன்ற படங்களின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமை இலட்சங்களில்தான் இருந்ததாம். இப்போது அதுவும் கோடிகளாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.
இப்போது ‘ஜூராசிக் வேர்ல்டு’ படத்தின் தமிழக உரிமைக்காக போட்டியிடும் நிறுவனங்கள் ‘இரண்டரை கோடி’ வரை அதற்கு ஒதுக்கத் தயாராக உள்ளனராம்.
தமிழ்ப்படங்களைப் போல விளம்பரங்களுக்குச் செலவு செய்யவேண்டியதில்லை. இதற்கான பார்வையாளர்கள் தனியாக இருப்பதால் தமிழ்ப் படங்களோடு போட்டியும் ஏற்படாது ஆகிய காரணங்களால் இதுபோன்ற ஆங்கிலப்படங்களை வாங்கப் போட்டி போடுகிறார்களாம்.