கோலாலம்பூர், மே 25 – சுபாங் ஜெயாவிலுள்ள யுஎஸ்ஜே 11/1ஜெ பகுதியில் நேற்று ராட்சச அளவிலான எலி ஒன்று பிடிபட்டதாக நட்பு ஊடகங்களில் படத்துடன் தகவல் ஒன்று வெளியானது.
(லிம் சியான் சீ பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த படம்)
லிம் சியான் சீ என்பவர் ராட்சஷ எலி ஒன்று பிடிபட்டுள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் படத்துடன் பதிவு செய்திருந்தார்.
அதே வேளையில், “சிலாங்கூர் அரசாங்கமும், ஹன்னா இயோவும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? – நாய்களை விட பெரிய அளவில் எலிகளை உருவாக்க நினைக்கிறார்களா? மலேசிய சாதனைப் புத்தகத்தில் இது ( ராட்சஷ எலி) இடம்பெறப்போகிறதா?” என்றும் கருத்துக் கூறியிருந்தார்.
அவரின் இந்த பதிவு பேஸ்புக் எங்கும் பரபரப்பாக பலராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
இந்நிலையில், எதிர்கட்சியை சேர்ந்தவரும், சிலாங்கூர் சட்டமன்ற சபாநாயகருமான ஹன்னா இயோ இன்று தனது பேஸ்புக் பக்கத்தில், அந்த ராட்சஷ அளவிலான எலி உண்மை இல்லை என்றும், பெரிய அளவில் காட்டுவதற்காக எடுக்கப்பட்ட கேமரா கோணம் என்பதையும் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.
(ஹன்னா இயோ பேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்த படம்)
தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்கள் இது போன்று இணையத்தளங்களில் தங்களுக்கு எதிராகத் திரித்து விடும் வேலைகளை செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் ஹன்னா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து பதிலடி கொடுத்துள்ளார்.
– ஃபீனிக்ஸ்தாசன்