வாங் கெலியன், மே 27 – பெர்லிஸ் மாநிலம் மற்றும் தாய்லாந்து எல்லைப் பகுதியில் புதிய மனிதக் கடத்தல் முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட குடியேறிகள் பலர் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அண்மையில் மலேசிய அதிகாரிகள் பெர்லிசில் கண்டுபிடித்த 27 முகாம்களைக் காட்டிலும் இப்புதிய முகாம் 2 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என நம்பப்படுகிறது.
தற்போது இந்த முகாம் இருந்ததற்குச் சாட்சியாகச் சிதறிக் கிடக்கும் சில மூங்கில் மற்றும் விறகுக் கட்டைகளும் சில நெகிழித் தாள்களுமே (plastic sheets) இப்பகுதியில் எஞ்சியுள்ளன.
இதை முகாம் என்று குறிப்பிடுவது கூட தவறு. ஏனெனில் இங்கு காணப்படும் சில தூண்கள் முறுக்குக் கம்பிகளாலும், சுவர்கள் கம்பி வலைகளாலும் பின்னப்பட்டுள்ளன.
மேலும் கூண்டு போன்ற இந்த அமைப்பைச் சுற்றி மூன்று கண்காணிப்புக் கோபுரங்களும் காணப்படுகின்றன. விறகுகளால் ஆன ஒரு கூண்டின் மேல் குளியல் தொட்டி ஒன்று காணப்படுகிறது. மனிதக் கடத்தல்காரர்கள் இந்தத் தடுப்பு முகாமை வேண்டும் என்றே அழித்திருக்க வேண்டும் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த முகாமிற்கும், ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட மற்ற முகாம்களுக்கும் உள்ள தொடர்பு குறித்துக் காவல்துறையினர் ஆராய்ந்து வருகிறார்கள்.
பாடாங் பெசார் பகுதியில் கடந்த திங்கட்கிழமையன்று இத்தகைய 27 தடுப்பு முகாம்களையும், 139 சவக் குழிகளையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.