Home வணிகம்/தொழில் நுட்பம் மாஸ் மறுசீரமைப்பில் நம்பிக்கை அளிக்கிறார் முல்லர் !

மாஸ் மறுசீரமைப்பில் நம்பிக்கை அளிக்கிறார் முல்லர் !

503
0
SHARE
Ad

Christoph-MuellerMASகோலாலம்பூர், ஜூன் 1 – மாஸ் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் புதிய தலைமை நிர்வாகி கிறிஸ்டோப் முல்லர்(52) நம்பிக்கை அளிக்கிறார். மாஸ் நிறுவனத்தை முற்றிலும் புதிய நிறுவனமாக மாற்றுவதில் உறுதி காட்டும் முல்லர், அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

முல்லருக்கு மாஸின் மறுசீரமைப்பு போன்ற கடினப்பாதைகள் புதிதல்ல. அவர் ஏற்கனவே சரிவை சந்தித்துக் கொண்டிருந்த ‘ஏர் லிங்கஸ்’ (Aer Lingus) மற்றும் லுஃப்தான்சா நிறுவனங்களை மீண்டும் வெற்றிப்பாதைக்கு திருப்பிய அனுபவம் உண்டு. மாஸ் நிறுவனத்தை பொருத்தவரை, எம்எச் 370 மற்றும் எம்எச் 17 பெரிடர்களுக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் மத்தியில் சற்றே பயத்தையும், பங்குதாரர்கள் மத்தியில் நன்மதிப்பு இழப்பையும் சந்தித்துள்ளது.

இதனை போக்க வேண்டுமானால், மாஸில் ஒட்டுமொத்தமாக அனைத்தையும் மாற்ற வேண்டும். இதற்கு முல்லர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், மாஸின் பழைய வரலாறும், நன்மதிப்பும் மறைந்து போய்விடாமல் காக்க வேண்டும் என்ற விமர்சனமும் எழாமல் இல்லை. எனினும், முல்லர் இதுபோன்ற விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் தனது நடவடிக்கைகளை துணிந்து செய்துவருகிறார்.

#TamilSchoolmychoice

அதன் எதிரொலி தான் சமீபத்தில் 20000 பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி நீக்க கடிதங்கள் மற்றும் வர்த்தக இலாபம் இல்லாத வழித் தடங்களில் மாஸ் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது போன்றவையாகும்.  இதற்கிடையே முல்லர் கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில், மாஸின் புதிய மாற்றங்கள் பற்றி கூறுகையில், “அரசு நமக்கு நிதியுதவி செய்கிறது. மாஸ் நிறுவனத்தை மீண்டும் தேசிய விமான நிறுவனமாக, நாட்டின் புதிய சின்னமாக மாற்ற வேண்டியது நமது பணி. நான் பணி அமர்த்தப்பட்டது மாஸ் நிறுவனத்தை வர்த்தக ரீதியாக முன்னேற்றத்தான். இங்கு சிறு தவறுகளுக்கும் இடமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

முல்லரை பணியமர்த்தி உள்ள கஸானா நிறுவனத்தை பொருத்தவரை, 2017-ம் ஆகஸ்ட் மாதத்திற்குள் மாஸை மீண்டும் வெற்றிப்பாதைக்கு திருப்ப வேண்டும் என்பதாகும்.  முல்லரின் நடவடிக்கைகள் நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தினாலும், பல்வேறு நடவடிக்கைகள் சற்றே சந்தேகத்தை கிளப்புகின்றன.

முல்லரின் நடவடிக்கைகள் பற்றி பெயர் வெளியிட விரும்பாத மாஸ் நிறுவனத்தின் நிர்வாகிகளுள் ஒருவர் கூறுகையில், “சிறுசிறு விஷயங்களையும் அதிக கவனத்துடன் கையாள்கிறார்.  அவரின் இந்த நடவடிக்கைகள் பலருக்கு சந்தேகத்தை எழுப்பினாலும், எங்களைப் பொருத்தவரை அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்துபவரே முக்கியம். முல்லர் அதனை செய்து வருகிறார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.